டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி 5,000 பேர் மீது 5 வழக்குகள்
டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி 5,000 பேர் மீது 5 வழக்குகள்
ADDED : ஜன 09, 2025 06:48 AM
மேலுார் : மதுரை மாவட்டம், மேலுார் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி, ஒரு மாதத்திற்கும் மேலாக மேலுார் பகுதியைச் சேர்ந்த, 46 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏலம் ரத்து செய்யப்படாத நிலையில், பல்லுயிர் தளம் என கருதப்படும் இரு கிராமங்களை தவிர்த்து, திட்டம் தயாரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதை ஏற்காத மக்கள், திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முன்தினம் மேலுார் முல்லை பெரியாறு ஒருபோக விவசாய சங்கம் சார்பில், மேலுார் தெற்கு தெருவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை நகரை நோக்கி, 18 கி.மீ., பேரணியாக சென்றனர்.
தடுப்புகளை சேதப்படுத்தியது என, 5,000 விவசாயிகள் மீது இரு வழக்குகளை தல்லாகுளம் போலீசார் பதிவு செய்தனர். அதே போல, அதே 5,000 விவசாயிகள் மீது, மேலுார் போலீசார் மேலும் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

