ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்ட தம்பதி கொலையில் 5 பேர் கைது
ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்ட தம்பதி கொலையில் 5 பேர் கைது
ADDED : செப் 29, 2024 08:02 AM

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், புதிய சிப்காட் சாலை பகுதியில், 24ம் தேதி அடையாளம் தெரியாத இருவர் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன. அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இறந்தவர்கள் இருவரும், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், 55, அவரது மனைவி பிரேமலதா, 50, என விசாரணையில் தெரியவந்தது. இவர்கள், தேனியில் ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தனர்.
மணிகண்டனிடம் தேனி மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ், 31, என்பவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். மணிகண்டனிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதையறிந்த தேவராஜ், அதை அபகரிக்க முயற்சித்தார்.
இதற்காக, தன் நண்பர்களான கன்னியாகுமரியைச் சேர்ந்த ேஹாட்டல் ஊழியர் அஸ்வின், 21, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் சபரி, 35, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட பிரவீன்குமார், 33, மற்றும் நந்தகுமார், 27 ஆகியோருடன் சேர்த்து, கடந்த, 22 அன்று தேனி மாவட்டம் சென்றுள்ளார்.
அங்கு, மணிகண்டன், பிரேமலதா ஆகியோரை, பிளாட் வாங்க இடம் பார்க்க வேண்டும் எனக்கூறி ஏமாற்றி, தேனி மாவட்டம், நாகலாபுரம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று, அவர்களிடமிருந்த நகைகளை பறித்து கொண்டு, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
பின், சடலத்தை காரில் கொண்டு வந்து கடந்த, 23 அன்று தடங்கம் பகுதியில் வீசி சென்றுள்ளனர். பறித்த நகைகளை துாத்துக்குடியில் விற்றுள்ளனர். இதையடுத்து, ஐந்து பேரையும், அதியமான்கோட்டை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.