அறக்கட்டளை நடத்தி முதலீடு மோசடி: 5 பேர் மீது வழக்கு
அறக்கட்டளை நடத்தி முதலீடு மோசடி: 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 14, 2025 03:27 AM
விருதுநகர்:அருப்புக்கோட்டையில் அறக்கட்டளை நடத்தி முதலீடு மோசடியில் ஈடுபட்ட நிறுவனர்கள் சிவகங்கையை சேர்ந்த காளிமுத்து, அவரது மனைவி அம்பிகா, நிர்வாகி ராஜாங்கம், பணியாளர்கள் தேவகி, ஜெகதா ஆகியோர் மீது விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தது அம்பிகா, ஜெகதாவை கைது செய்தனர்.
அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு பீப்பிள் எஜூக்கேஷனல் அன்ட் எக்னாமிக்கல் டெவலப்மென்ட் டிரஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட அறக்கட்டளையில் ரூ. 3.80 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 1 கோடி தருவதாக மக்கள், மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் ஆசை வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டது.
இதை நம்பி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த பத்மநாபன், அறக்கட்டளையில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்து விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து அறக்கட்டளை நிறுவனர்களான தம்பதி காளிமுத்து- அம்பிகா, நிர்வாகி ராஜாங்கம், பணியாளர்கள் தேவகி, ஜெகதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து அம்பிகா,ஜெகதாவை கைது செய்தனர். இந்த அறக்கட்டளையில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவர்கள் நேரில் புகார் அளிக்கலாம் என இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.