ADDED : டிச 28, 2024 08:55 PM
சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, தாம்பரம் - திருநெல்வேலி உட்பட ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜன., 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல். இதற்காக தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும், டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
பொங்கல் சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என்று பயணியர் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பயணியரின் தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், சென்ட்ரல் - மானாமதுரை, எழும்பூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் ஒப்புதல் பெறப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.