அதிவேகமாக பறந்த கார் மோதி மாடு மேய்த்த 5 பெண்கள் பலி
அதிவேகமாக பறந்த கார் மோதி மாடு மேய்த்த 5 பெண்கள் பலி
ADDED : நவ 28, 2024 01:22 AM

மாமல்லபுரம், :மாமல்லபுரம் அருகே, சாலையோரம் இருந்த பெண்கள் மீது கார் மோதி, ஐந்து பெண்கள் பரிதாபமாக இறந்தனர். அப்பகுதி வாலிபர்கள் ஆத்திரமடைந்து, கார் ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர்.
மாமல்லபுரம் அடுத்த, பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள், நேற்று பிற்பகல், பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில் மாடுகள் மேய்த்தனர்.
பகிங்ஹாம் கால்வாய்க்கும், சாலைக்கும் இடையே மாடுகள் மேய்ந்தன. அவற்றை கண்காணித்து கொண்டிருந்த பெண்கள், மாமல்லபுரம் பஸ் நிறுத்தம் அருகில், சாலையோரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2:20 மணியளவில், அவ்வழியாக மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற ஸ்கோடா ரேபிட் கார், அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், முத்து மனைவி ஆந்தாயி, 71, சாமிநாதன் மனைவி விஜயா, 55, குப்பன் மனைவி கவுரி, 61, சின்னராஜ் மனைவி லோகம்மாள், 65, கோவிந்தசாமி மனைவி யசோதா, 60 ஆகியோர், சாலையோர புதரில் துாக்கி வீசப்பட்டு, உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
இதையறிறந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துடிதுடித்த அவர்கள் காரை மடக்கி, அதில் பயணம் செய்த, குன்னப்பட்டு, தனியார் பல்கலை மாணவர்களான, சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோஷ்வா இமானுவேல், 19, பெருங்குடியைச் சேர்ந்த தாஹிர் அகமது, 19, ஆகியோரை, சரமாரியாக அடித்து உதைத்தனர். காரை சேதப்படுத்தினர்.
மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று, அவர்களை மீட்டு, போலீஸ் வாகனத்தில் பாதுகாத்தனர்.
மறியல்
அவர்களை தங்களிடமே ஒப்படைக்குமாறு, போலீசாரிடம், அப்பகுதி மக்கள் தகராறு செய்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியே திருப்பி விடப்பட்டன.
கொடூர விபத்தில் பெண்கள் பலியானதை அறிந்து, சப் - கலெக்டர் நாராயணசர்மா, போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் ஆகியோர் அங்கு சென்றனர்.
பொதுமக்கள், இறந்தவர்கள் உடல்களை கிடத்தி, அவர்கள் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறு, ஆவேசத்துடன் போராடினர். அரசு தரப்பில் நிவாரணம் வழங்கப்படும் என, சப் - கலெக்டர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதைத் தொடர்ந்து, போலீசார், உடல்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காரில், நான்கு பேர் பயணம் செய்ததாகவும், இரண்டு பேர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இப்பெண்கள் வழக்கமாக மாடு மேய்த்துவிட்டு, மாலை 4:00 மணிக்கு பிறகே, வீடு திரும்புவர். நேற்று மழை காரணமாக, பிற்பகலே திரும்ப முடிவெடுத்து, விபத்தில் சிக்கி இறந்தது, அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிவாரணம்
விபத்தில் ஐந்து பேர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.