ADDED : ஜூன் 21, 2025 01:57 AM
சென்னை:தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில், ஆண்டுதோறும் ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு அமைச்சர் தேதி கிடைக்காததே காரணம் என, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு கலை பண்பாட்டுத் துறை அளித்துள்ள விளக்கம்:
ஒவ்வொரு ஆண்டும், தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பில், ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, ஏற்கனவே வெளியிடப்பட்டு, 610 கலை படைப்புகள் பெறப்பட்டன.
அவற்றில் சிறந்தவற்றை தேர்வு செய்வதற்காக, துறை சார்ந்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த ஏப்., 11ல், 270 கலைப்படைப்புகளை தேர்வு செய்தது.
அவற்றின் படைப்பாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து, அசல் படைப்புகள் பெறப்பட்டன.
அதன்பின், கடந்த மாதம் 15ம் தேதி, அசல் படைப்புகளில் சிறந்த 50 படைப்புகள், நவீன பாணி மற்றும் மரபுவழி வகைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, ஓவிய, சிற்ப கண்காட்சி நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கி உள்ளன. கண்காட்சி குறித்த தகவல் வெளியிடப்படும்.
கலை பண்பாட்டு துறை சார்பில், 2024 - 25ம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுகள், கடந்த மார்ச் 6ம் தேதி வழங்கப்பட்டன. நடப்பு நிதியாண்டுக்கான கலைச்செம்மல் விருதுக்கு, அரசாணை பெறப்பட்டதும், அறிவிப்பின் வாயிலாக கலைப்படைப்புகள் பெறப்படும்.
அவற்றில், தேர்வுக்குழு தேர்வு செய்யும் ஆறு படைப்பாளர்களுக்கு விருது வழங்கப்படும். இந்நிகழ்வில், அமைச்சரால் தாமதம் என்பதில் உண்மை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.