பெண்ணையாற்று திட்ட பாதிப்பு 50 ஆண்டு விபரங்கள் கேட்பு
பெண்ணையாற்று திட்ட பாதிப்பு 50 ஆண்டு விபரங்கள் கேட்பு
ADDED : பிப் 29, 2024 11:06 PM
சென்னை:கர்நாடகா அரசு, பெண்ணையாற்றில் செயல்படுத்திய திட்டங்களால், 50 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்துள்ள பாதிப்புகள் குறித்த தீர்ப்பாயத்தில் விபரம் கேட்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலம், நந்தி மலையில் உற்பத்தியாகும், பெண்ணையாறு, 430 கி.மீ., பயணித்து, தமிழகத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.
பெண்ணையாறு வாயிலாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறுகின்றன. பெண்ணையாற்றிற்கு மார்க்கண்டேய நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆகிய துணை ஆறுகள் உள்ளன. தமிழகத்தில், இது தென்பெண்ணையாறு என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆற்றில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே, அணையை கட்டி கர்நாடகா நீரை தடுத்துள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு நீரேற்று திட்டங்களையும் செயல்படுத்தி கர்நாடகா மாநிலத்தில் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் பாயும் பெண்ணையாற்றில் நீரோட்டம் பாதித்து உள்ளது. இப்பிரச்னையில் தீர்வு காண்பதற்காக, பெண்ணையாறு தீர்ப்பாயத்தை மத்திய அரசு பிப்., மாதம் அமைத்தது. இதன் தலைவராக, மத்திய நீர்வள ஆணையர் குஷ்விந்தர் ஹோரா நியமிக்கப் பட்டு உள்ளார்.
மத்திய வேளாண்மை, சுற்றுச்சூழல், பாசன மேலாண்மை அதிகாரிகள், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெண்ணையாறு தீர்ப்பாயத்தின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்துள்ளது. இதில், தமிழகம் சார்பில், காவிரி மற்றும் பன்மாநில நதிகள் தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெண்ணையாற்றில், கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள கட்டுமானம் மற்றும் நீரேற்று திட்டங்களால், தமிழகத்திற்கு 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. மாதந்தோறும் தீர்ப்பாய கூட்டத்தை நடத்தவும் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 15ம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடக்கவுள்ளதால், விபரங்களை திரட்டும் பணிகளில் தமிழக நீர்வளத்துறையினர் இறங்கியுள்ளனர்.

