ADDED : அக் 08, 2024 12:59 AM
சென்னை: தமிழகத்தில் ஓடிய வெளிமாநில பதிவெண் கொண்ட 500 ஆம்னி பஸ்களும் தமிழக பதிவெண்ணுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏராளமான ஆம்னி பஸ்கள், வெளி மாநில நம்பர் பிளேட் பொருத்தி இயக்கப்பட்டன. இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, தமிழகத்திற்குள் ஓடும் வெளிமாநில பதிவெண் ஆம்னி பஸ்கள், தமிழக பதிவெண்ணுக்கு மாற்றப்பட வேண்டும் என, கடந்த ஜூனில் போக்குவரத்து துறை உத்தரவிட்டது.
இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
அரசு உத்தரவுப்படி, வெளிமாநிலங்களில் பதிவு செய்து, தமிழகத்திற்குள் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களை, தமிழக பதிவெண்ணுக்கு படிப்படியாக மாற்றி வருகிறோம்.
மொத்தமுள்ள 600 ஆம்னி பஸ்களில், 500 ஆம்னி பஸ்களை தமிழக பதிவெண்ணுக்கு மாற்றி, மீண்டும் சேவையில் ஈடுபடுத்தி உள்ளோம்.
எஞ்சியுள்ள பஸ்களையும், விரைவில் தமிழக பதிவெண்ணுக்கும் மாற்ற, சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.