'பேர்புரோ 2025' கண்காட்சியில் 500 குடியிருப்பு திட்டங்கள்
'பேர்புரோ 2025' கண்காட்சியில் 500 குடியிருப்பு திட்டங்கள்
ADDED : பிப் 15, 2025 12:23 AM
சென்னை:'பேர்புரோ 2025' என்ற வீட்டுவசதி கண்காட்சியில், 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், 500 குடியிருப்பு திட்டங்கள் குறித்த விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக, 'கிரெடாய்' அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் முகமது அலி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கிரெடாய் சார்பில், 17வது ஆண்டாக, பேர்புரோ 2025 வீட்டுவசதி கண்காட்சி நேற்று துவங்கியது. முதல் முறையாக சென்னையை முன்னிலைப்படுத்தும் வகையில், 'சூப்பர் சென்னை' என்ற பெயரில், தனியான சின்னம் வெளியிடப்பட்டது.
இந்த கண்காட்சியில், எங்கள் அமைப்பை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின், 500 குடியிருப்பு திட்ட விபரங்கள், பல்வேறு அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு, 3.25 கோடி சதுர அடி பரப்பளவு வீடுகள், 325 ஏக்கர் பரப்பளவு மனை திட்டங்கள் குறித்த விபரங்களை, மக்கள் ஒரே இடத்தில் அறியலாம்.
இங்கு, 15 லட்சம் ரூபாய் முதல், 15 கோடி ரூபாய் வரையிலான பல்வேறு விலைகளில் வீடு, மனைகள், வில்லா வகை வீடுகள் கிடைக்கும்.
இன்றும், நாளையும் நடக்கும் இக்கண்காட்சியில் விசாரிப்புகள் மேற்கொண்டு, வீடு, மனை வாங்க முன்பதிவு செய்வோருக்கு, அந்தந்த நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள், சிறப்பு தள்ளுபடிகள், பரிசுகளை வழங்குகின்றன.
இங்கு வந்து பார்த்து, வீடு வாங்க முடிவு செய்வோருக்கு, உடனடியாக வீட்டுக்கடன் ஒப்புதல் வழங்கும் வகையில், வங்கிகளும் அரங்குகள் அமைந்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள், உடனடி கடன் ஒப்புதல் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கு, மூன்று நாட்களில், ஒரு லட்சம் பேர் வரை வருவர் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

