ADDED : செப் 22, 2024 01:12 AM
சென்னை:தமிழக மருத்துவத் துறை கடந்த மூன்று ஆண்டுகளில், 545 விருதுகள் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு செய்திக் குறிப்பு:
கடந்த ஆண்டில் மட்டும் 10,000 நன்கொடையாளர்கள், தங்கள் கண்களை தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். 'தேசிய தர உறுதி நிர்ணய விருது' 2012ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதன் வழியாக, 2012 முதல் 2021 வரை, தமிழகத்திற்கு 79 விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், 545 விருதுகளை பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருந்து, கடந்த ஆண்டு அக்., 3ம் தேதி, அம்மாநில மருத்துவத்துறை இயக்குனர் ராஜேஷ் வைத்யா தலைமையில், 60 மருத்துவ அலுவலர்கள் தமிழகம் வந்தனர்; மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிட்டனர். இது போன்ற வசதி, குஜராத் மாநிலம் வர, இன்னும் 20 ஆண்டுகளாகும் எனக்கூறி, தமிழக மருத்துவத் துறைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேகாலயா மாநிலத்தில் இருந்து 29 மருத்துவர்கள், தமிழகம் வந்து உயிர் காக்கும் பேறுகால மருத்துவ சிகிச்சை முறையில் பயிற்சி பெற்று சென்றனர். அதற்காக, அம்மாநில மருத்துவத் துறை அமைச்சர் மேஸல் அம்பரீன் லிண்டோ, தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆம்பெர் ஜேட் சாண்டெர்சன், தமிழக மருத்துவமனைகளின் கட்டமைப்பை பார்த்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் கூட இம்மாதிரியான மருத்துவ கட்டமைப்பு இல்லையென தமிழகத்தை பாராட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.