5.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்க அரசு இலக்கு
5.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்க அரசு இலக்கு
UPDATED : ஜன 11, 2024 06:42 PM
ADDED : ஜன 06, 2024 11:55 PM

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் இன்று துவங்கியது. 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டின் வாயிலாக, 5.50 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தை, 2030க்குள், 'ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்' அதாவது, 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்றுவேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதற்காக, பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடு செய்து உள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் மாநாடு நடக்கிறது. ஸ்டாலின் துவக்கி வைத்தார். மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 50 நாடுகளை சேர்ந்த, 450க்கு மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில், 'டிரில்லியன் டாலருக்கான தமிழகத்தின் பார்வை' எனும் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடு தேவைப்படும் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும், 'டேன்பண்ட்' திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்.'செமி கண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி மின்சார கொள்கை 2024' வெளியிடப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்க, 30,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மாநாட்டை முன்னிட்டு மொத்தம் 26 அமர்வுகளில், 170க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பேச உள்ளனர்.
மாநாடு மையத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் துறை, புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் அரங்குகள், தமிழகத்தில் தொழில் துவங்க சாதகமான சூழலை வெளிப்படுத்தும் அரங்கு, சர்வதேச நிறுவனங்களின் அரங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
'டாடா, வின்பாஸ்ட், குவால்காம், அடிடாஸ், மஹிந்திரா ஹாலிடேஸ், சுஸ்லான் எனர்ஜி, மைக்ரோசாப்ட்' உட்பட பல நிறுவனங்கள் முதலீடு செய்ய, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளன.சிங்கப்பூர் நிறுவனங்கள், 31,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அந்நாட்டு துாதரகம் அறிவித்துள்ளது.தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், நாளை மாலை முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகும் என தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
சண்டே போச்சே.
..உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சிகள் நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பாகின்றன. அரசு கல்லுாரிகளில் இதை பெரிய திரையில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவ - மாணவியர் இதற்காக ஞாயிறு அன்று கல்லுாரிக்கு வர வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.'ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்களை வரவழைத்து முதலீட்டாளர்கள் மாநாட்டை பார்த்ததை, வீடியோவாக எடுத்து அனுப்ப வேண்டும்' என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?
* காஞ்சியில் பெட்ரோலிய மின்சார வாகன கார், பேட்டரி தயாரிப்பு நிலையத்தை ஹூண்டாய் நிறுவுகிறது.
* பெகட்ரான் 1000 கோடி முதலீடு செய்கிறது. 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.* ஹூண்டாய் மோட்டார்ஸ் 6,180 கோடி ஒப்பந்தம் போட்டுள்ளது.
* கிருஷ்ணகிரியில் உள்ள மின் ஆலையை ரூ.12,082 கோடியில் விரிவாக்கம் டாடா நிறுவனம் விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* கேஎஸ்வி நிறுவனத்துடன் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
* வியட்நாமின் முன்னணி மின்வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் 16 ஆயிரம் கோடியில் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்கிறது. நடப்பாண்டிலேயே கட்டுமான பணிகள் துவங்க உள்ளது. இதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*அமெரிக்காவின் பாஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி மதிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளது. ரூ. 515 கோடியில் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டில் கோத்ரேஜ் நிறுவனம் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளது.
* டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5000 கோடி முதலீடு செய்கிறது. மிட்சுபிஷி 500 கோடி முதலீடு செய்கிறது. கும்மிடிப்பூண்டியில் அமையும் இந்த நிறுவனத்தில் 60 சதவீத பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* குவால்காம் நிறுவனம் ரூ.1772.27 கோடி முதலீடு செய்கிறது. 1600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.