எம்பி, எம்எல்ஏ.,க்கள் மேல் 561 வழக்குகள்: தமிழக அரசு தகவல்
எம்பி, எம்எல்ஏ.,க்கள் மேல் 561 வழக்குகள்: தமிழக அரசு தகவல்
ADDED : ஏப் 02, 2024 01:19 PM

சென்னை: தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 20 வழக்குகளும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று (ஏப்.,2) விசாரணைக்கு வந்தபோது, 'தமிழகம் முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளன. இதில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன' என தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, 'குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 20ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

