சிறுமி பலாத்கார வழக்கில் 6 பெண் போலீசாருக்கு ரூ.9 லட்சம் அபராதம்
சிறுமி பலாத்கார வழக்கில் 6 பெண் போலீசாருக்கு ரூ.9 லட்சம் அபராதம்
ADDED : டிச 29, 2025 11:59 PM

சென்னை : சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத, ஆறு பெண் போலீசாருக்கு, 9 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆணையத்தில், 15 வயது சிறுமி தரப்பில் தாக்கல் செய்த மனு:
வேலுாரைச் சேர்ந்த மோகனபிரியா என்பவர், 2022ல் தன் வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார். அங்கு சந்தோஷ்குமார் என்பவரால், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும்; இல்லையெனில், கொலை செய்து விடுவேன் என மோகனபிரியா மிரட்டியதுடன், அடித்து துன்புறுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து, போலீசில் புகார் அளித்தும், பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்ததை தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு எதிராக, 'போக்சோ' சட்டத்தின்படி தண்டனை பெற்றுத்தர, வேலுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் தவறி விட்டனர். இதனால், சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த ஆணைய தலைவர் நீதிபதி மணிகுமார், உறுப்பினர் கண்ணதாசன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
ஆணையம் நடத்திய விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வேலுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஆறு போலீசார் தவறு செய்திருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் தமிழக அரசின் கீழ் பணிபுரிகின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தொகையை, தவறு செய்த, வேலுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், வாசுகி, எஸ்.ஐ., சத்தியவாணி, வேலுார் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா ஆகியோரிடமிருந்து தலா 2 லட்சம் ரூபாய், காவலர்கள் தயமந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் இருந்து தலா 50 ஆயிரம் ருபாய் வசூலித்து கொள்ளலாம்.
அந்த ஆறு போலீசார் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாக அதிகாரியை வைத்து, மறு விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

