'ஆன்லைன்' வர்த்தக ஆசை காட்டி ரூ.97 லட்சம் சுருட்டிய 6 பேர் கைது
'ஆன்லைன்' வர்த்தக ஆசை காட்டி ரூ.97 லட்சம் சுருட்டிய 6 பேர் கைது
UPDATED : நவ 14, 2024 06:36 AM
ADDED : நவ 14, 2024 12:33 AM

சென்னை: சர்வதேச பங்கு சந்தையில், 'ஆன்லைன்' வாயிலாக வர்த்தகம் செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை காட்டி, 97 லட்சம் ரூபாயை மோசடி செய்த, சைபர் குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூன் 21ம் தேதி, மர்ம நபர்கள், 'வாட்ஸாப்' வாயிலாக, மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம், சர்வதேச பங்கு சந்தையில் ஆன்லைன் வாயிலாக வர்த்தகம் செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை காட்டி உள்ளனர்.
இதை நம்பி, மர்ம நபர்கள் தெரிவித்த பல வங்கி கணக்குகளுக்கு, 97 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார்.
போலி ஆவணங்கள்
இதையடுத்து, மர்ம நபர்கள், அந்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து இருப்பதாகவும், அதில் லாபம் கிடைத்து வருவதாகவும், போலி ஆவணங்களை அவருக்கு அனுப்பி உள்ளனர். பின், தொடர்பை துண்டித்து விட்டனர்.
இதுகுறித்து, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., கருப்பையா மற்றும் இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர், மர்ம நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, மர்ம நபர்கள், ஆன்லைன் வாயிலாக மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் என்பதும், குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கை பயன்படுத்தி, 20 லட்சம் ரூபாயை மோசடி செய்ததும் தெரியவந்தது.
அந்த பணத்தை, திருச்சி, ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சீனி முகமது, 21, என்பவரின் இரு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி உள்ளனர் என்பதும் தெரியவந்தது. அந்த வழங்கி கணக்குகளை முடக்கி, சீனி முகமதுவை, நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர், திருச்சி உறையூரைச் சேர்ந்த இப்ராஹிம், 30, முகமது அசாருதீன், 25, தனரத்தின நகரைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஷபீர், 26, முகமது ரியாஸ், 30, தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியைச் சேர்ந்த முகமது மர்ஜீத், 40, ஆகியோருடன் சேர்ந்து, சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார்.
1,000 ரூபாய் கமிஷன்
இதையடுத்து, இப்ராஹிம் உள்ளிட்ட ஐந்து பேரை, நேற்று கைது செய்துள்ளனர்.
ஆறு பேரும் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் பதுக்கி வைத்திருந்த வங்கி கணக்கு புத்தகங்கள், ஏ.டி.எம்., மற்றும் 'சிம் கார்டு'கள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பண மோசடிக்கு வங்கி கணக்கை பயன்படுத்திக் கொள்ள சம்மதம் தெரிவிப்போருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 1,000 ரூபாய் கமிஷன் கொடுத்துள்ளனர்.
மேற்கு வங்கம், கர்நாடகா, டில்லி ஆகிய மாநிலங்களிலும், இக்கும்பல் கைவரிசை காட்டி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.