டாப் 100 தகுதி பட்டியலில் 6 தமிழக மாணவர்கள்... 'நீட்' தேர்வில் சாதனை:27-ம் இடத்தில் திருநெல்வேலி சூரிய நாராயணன்
டாப் 100 தகுதி பட்டியலில் 6 தமிழக மாணவர்கள்... 'நீட்' தேர்வில் சாதனை:27-ம் இடத்தில் திருநெல்வேலி சூரிய நாராயணன்
ADDED : ஜூன் 14, 2025 10:54 PM
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தகுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில்'டாப் 100' தகுதி பட்டியலில் தமிழக மாணவர்கள் ஆறு பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் தேசிய அளவில் 27வது இடத்தையும் மாநில அளவில் முதலிடமும் பெற்று அசத்தியுள்ளார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், எய்ம்ஸ், மத்திய கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. அத்துடன், கால்நடை மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ராணுவ கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கும், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுதும் 9 லட்சத்து 37,411 ஆண்கள்; 12 லட்சத்து, 71,896 பெண்கள்; 11 மூன்றாம் பாலினத்தவர் என 22 லட்சத்து 9318 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 5 லட்சத்து 14,063 ஆண்கள்; 7 லட்சத்து 22,462 பெண்கள்; ஆறு மூன்றாம் பாலினத்தவர் என 12 லட்சத்து 36,531 மாணவர்கள் அதாவது 55.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட, 0.45 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 35,715 பேர் நீட் தேர்வு எழுதியதில், 76,181 பேர், அதாவது, 56.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2024ல், தேர்ச்சி சதவீதம் 58.47 ஆகவும், தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, 89,199 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி, 2.34 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார், 686 மதிப்பெண்களுடன், தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உத்கர்ஷ் அவதியா, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷாங் ஜோஷி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், திருநெல்வேலியை சேர்ந்த எஸ்.சூர்யநாராயணன், 665 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில், 27வது இடமும் பிடித்துள்ளார். இவருடன் அபினித் நாகராஜ், புகழேந்தி, ஹிருத்திக் விஜயராஜா, ராகேஷ், பிரஜன் ஸ்ரீவாரி ஆகிய ஆறு தமிழக மாணவர்கள், 'டாப் 100' இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.