வளர்ந்த நாடாக இந்தியா மாற உயர்கல்வியில் 60% சேர்க்கை அவசியம் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேச்சு
வளர்ந்த நாடாக இந்தியா மாற உயர்கல்வியில் 60% சேர்க்கை அவசியம் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேச்சு
ADDED : ஜூலை 20, 2025 07:13 AM

சென்னை: ''வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டுமெனில், 60 சதவீத அளவுக்கு உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை இலக்கை அடைய வேண்டும்,'' என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதன் கூறினார்.
அரசு மேல்நிலை பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் இலவச உயர் கல்வி வழங்கும், 'ஸ்டார்ஸ்' திட்டத்தில் சேர்க்கை பெற்ற, 102 மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இத்திட்டத்தில், 90 மாணவர்களுக்கு வேலுார் வளாகத்திலும், 12 மாணவர்களுக்கு சென்னை வளாகத்திலும் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதன் பேசியதாவது:
'ஸ்டார்ஸ்' திட்டம் முதலில் ஆற்காடு, தர்மபுரியில் துவங்கி, மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், ஆந்திரா, மத்திய பிரதேச மாநிலங்களிலும் அமலில் உள்ளது.
மத்திய பட்ஜெட், 55 லட்சம் கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2.5 சதவீதம் தான் கல்விக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளது.
மாநில அரசுகள், 12 முதல் 14 சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்கீடு செய்கின்றன. இதில், பாதி சதவீதத்தையாவது மத்திய அரசு செலவு செய்தால், நாட்டில் அனைவரும் உயர் கல்வி பெற முடியும்.
இந்தியாவில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 28 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 60 முதல் 100 சதவீதமாக உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், நமக்கு இணையாக இருந்த சீனாவும், 60 சதவீதத்தை தாண்டி விட்டது.
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், 60 சதவீத அளவுக்கு உயர் கல்வி மாணவர் சேர்க்கை இலக்கை அடைய வேண்டும். தேசிய கல்வி கொள்கையில், 50 சதவீதம் உயர் கல்வி மாணவர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உயர் கல்வியை ஊக்குவிக்க, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்கலை துணை தலைவர் சங்கர் விஸ்வநாதன் பேசுகையில், ''தமிழ் வழியில் படித்து சேர்ந்துள்ள மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். இங்கு, போதியளவு ஆங்கில பயிற்சி வழங்கப்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் சுப்புலட்சுமி, பள்ளி கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன், 'ஸ்டார்ஸ்' திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, பல்கலை பதிவாளர் ஜெயபாரதி, இணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக், மாணவர் நலன் இயக்குநர் சி.டி.நைஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.