ADDED : செப் 28, 2024 02:06 AM

சென்னை:தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, 60 இடங்களில் தென்னங்கன்று உற்பத்தி பண்ணை அமைக்கும் பணிகளை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி, கடலுார் உள்ளிட்ட 17 மாவட்டங் களில் தேங்காய் விளைச்சல் நடக்கிறது. இந்த மாவட்டங்களில், பல ஆண்டுகளுக்கு முன் நடவு செய்த தென்னைகளில் மகசூல் குறைந்துள்ளது.
இலக்கு நிர்ணயம்
இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால், பல ஆயிரம் தென்னை மரங்கள் நாசமாகி விட்டதால், இளநீர், தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இத்தொழிலை நம்பியுள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, தேங்காய் சாகுபடியை அதிகரிக்க, தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது. தோட்டக்கலை துறைக்கு மாநிலம் முழுதும், 23 இடங்களில் தென்னை நாற்று பண்ணைகள்; 16 இடங்களில் தென்னை ஒட்டு மையங்கள் உள்ளன.
இங்கு கடந்தாண்டு, 20 லட்சம் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாகவும், மானிய விலையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
நடப்பாண்டு 10 லட்சம் தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
60 இடங்கள்
வரும் காலங்களில் தென்னங்கன்றுகள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், புதிதாக 60 இடங்களில் தென்னங்கன்று உற்பத்தி மையங்களை அமைக்கும் பணி துவங்கிஉள்ளது.
இது குறித்து, தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிதாக 60 இடங்களில் தென்னங்கன்றுகள் உற்பத்தி துவங்க உள்ளது. இங்கு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஏக்கருக்கு, 70 தென்னங்கன்றுகள் வரை வழங்கப்படும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுதோறும், 100 காய்களுக்கு மேல் மகசூல் பெறலாம். நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.