இலங்கைக்கு 600 லிட்டர் பெட்ரோல் படகில் கடத்தல்: நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது
இலங்கைக்கு 600 லிட்டர் பெட்ரோல் படகில் கடத்தல்: நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது
ADDED : மே 16, 2025 04:43 PM

ராமேஸ்வரம்; முசல் தீவு அருகே நடுக்கடலில் 600 லிட்டர் பெட்ரோலுடன் நின்று கொண்டிருந்த பைபர் படகை இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறையினர் பிடித்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிக்கு மிக அருகே இருப்பதால் மண்டபம் மரைக்காயர்பட்டினம், வேதாளம், முசல் தீவு, பாம்பன் குந்துகால், தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகுகளில் கஞ்சா, பீடி இலை பண்டல்கள், ஐஸ் போதை பொருள், சமையல் மஞ்சள், சுக்கு, கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் சமீப காலமாக அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று(மே 17) அதிகாலை மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரைக்கும் முசல் தீவுக்கும் இடையே கடல் வழியாக கடத்தல் பொருட்கள் படகில் கடத்தி செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து ஹோவர் கிராஃப்ட் ரோந்து படகில் முசல் தீவுக்கும் வேதாளைக்கும் இடையே ரோந்து சென்றனர்.
அப்போது நடுக்கடலில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த பைபர் படகு ஒன்றை சோதனை செய்தனர். படகில் 600 லிட்டர் பெட்ரோல் கேன்களில் அடைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெட்ரோல் கேன்களை பைபர் படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறையினர் படகில் இருந்த மூவரையும் பிடித்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை இணைந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் படகு மற்றும் படகில் இருந்த மூவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் எனவும், இந்த படகு இன்று (மே 17) தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு வந்து நடுக்கடலில் நங்கூரமிட்டு காத்திருந்த போது கடலோர காவல் படையினரால் பிடிபட்டதாக தெரிய வந்துள்ளது.