ADDED : செப் 17, 2025 12:03 AM
சென்னை:தமிழகத்தில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கையை, 74,321 ஆக அதிகரிக்க நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும் உள்ள ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. அதன்படி ஒரு ஓட்டுச்சாவடியில், 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அதை பிரித்து முறைப்படுத்த வேண்டும் என, மாநில தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, 68,321 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. பல ஓட்டுச்சாவடிகளில், 1,200 முதல் 1,500 வாக்காளர்கள் இருந்தனர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஓட்டுச்சாவடி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.
இதனால் கூடுதலாக, 6,000 ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓட்டுச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,321 ஆக உயர்கிறது. இது தொடர்பான பட்டியலை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தயாரித்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில், புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்குவது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட கலெக்டர்கள் விரைவில் கருத்து கேட்க உள்ளனர்.

