வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 60,000 கணினி பட்டதாரிகள் புறக்கணிக்கிறதா கல்வித்துறை
வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 60,000 கணினி பட்டதாரிகள் புறக்கணிக்கிறதா கல்வித்துறை
ADDED : ஜன 22, 2025 12:42 AM
மதுரை:தமிழகத்தில் கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., படித்த, 60,000 பட்டதாரிகள் அரசு பணி வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
தகுதி இருந்தும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும் கணினி பயிற்றுநர் பணியிடங்களிலும், இவர்களுக்கான நியமனங்கள் மறுக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.
மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., பட்டம் பெற்று, 60,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
பிற பாடங்களுக்கு உள்ளது போல, கணினி ஆசிரியர் நியமனத்திற்கு பி.எட்., கட்டாயம் இல்லை என்ற நிலை உள்ளதால், பி.எட்., தகுதியால் பயனில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்திலும், பி.எட்., பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்.
இதுபோல் பிற பாடங்களுடன் பி.எட்., தகுதி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) மற்றும் வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,), மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தகுதி உள்ளது.
ஆனால், கணினி அறிவியலுடன் பி.எட்., படித்தவர்களுக்கு இவ்வகை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதியில்லை.
அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுநர், ஆய்வக கணினி பயிற்றுநர், 'எமிஸ்' பணிக்கான பணியிடங்களில் மட்டுமே நியமிக்க தகுதி உள்ளது.
இதுபோன்ற பணியிடங்களில், பி.எட்., தகுதி இல்லாதவர்கள், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் மட்டும், 8,200 பணியிடங்களில் பி.எட்., பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில துணைத் தலைவர் கவிதா ஸ்ரீதர் கூறியதாவது:
கணினி பயிற்றுநர் பணியிடங்களை தனியார் நிறுவனங்களிடம் 'டெண்டர்' முறையில் விடாமல், அரசே நேரடியாக நியமிக்க வேண்டும் என, 2008ல் வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது.
இதன் மூலம் கணினி அறிவியல் பட்டம் படித்த, பி.எட்., பட்டதாரிகளை நியமித்து, மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய பணியை செய்யாமல், கேரளாவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு, 'கணினி பயிற்றுநர்கள்' நியமிக்க, பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும், 60,000 பட்டதாரிகளை புறக்கணித்து, அவர்கள் எதிர்காலத்தை தி.மு.க., அரசு குழிதோண்டி புதைத்து விட்டது.
கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களை போல, 10ம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனி பாடமாக நடைமுறைப்படுத்தினால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.