ADDED : மார் 19, 2024 11:24 PM

சென்னை:சீர்மரபினரை சேர்ந்த, 68 சமுதாய மக்களின் பிரதிநிதிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு, 2019 முதல், மத்திய அரசு பயன்பாட்டிற்கு, சீர்மரபினர் பழங்குடிகள் என்றும், மாநில அரசு பயன்பாட்டிற்கு சீர்மரபினர் சமுதாயம் என்றும் இரண்டு வகையான ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இரட்டை சான்றிதழ் முறையை ரத்து செய்து, சீர்மரபினர் பழங்குடிகள் என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கும்படி, சீர்மரபினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அரசை வலியுறுத்தி வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த 16ம் தேதி, சீர்மரபினர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, சீர்மரபினர் பழங்குடிகள் என ஒற்றை சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின்உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, சீர்மரபினர் நலச்சங்கத்தின் தலைவர் ஜெபமணி, தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி மற்றும் 68 சமுதாய மக்களின் பிரதிநிதிகள், நேற்று முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
தங்கள் கோரிக்கையை ஏற்று, சீர்மரபினர் பழங்குடிகள் என, ஒற்றை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதேநேரம் இன்னும் அரசாணை வெளியிடப்படாமல் இருப்பதை தெரிவித்தனர். அதற்கு முதல்வர் நான் உத்தரவு பிறப்பித்திருப்பதால்,அரசாணை வெளியிடப்படும் என்று உறுதிஅளித்தார்.

