ADDED : பிப் 13, 2025 10:07 PM
சென்னை:சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், த.வெ.க.,வில், 68,321 பூத் செயலர்களை நியமிக்க, அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
அக்கட்சிக்கு 120 மாவட்ட செயலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 95 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சிக்கான தேர்தல் வியூகத்தை, பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் வகுத்துத் தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விஜயுடன், அவர் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தல் வியூக கட்டணம் தொடர்பாக, மூன்று இலக்கத்தில் பெரிய தொகை, கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட அலுவலகம் ஆகியவற்றை, பிரசாந்த் கிஷோர் கேட்டுள்ளார். இது விஜய் பரிசீலனையில் உள்ளது.
மேலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி அடிப்படை கட்டமைப்பு முழுமையாக இல்லை. எனவே, பூத் வாரியாக செயலர்களை நியமிக்க வேண்டும். அதன் பின்னரே, தேர்தல் வியூக பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும் என, விஜயிடம் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
அவரது பரிந்துரைப்படி, 68,321 பூத் செயலர்களை நியமிக்க, மாவட்ட செயலர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.