சுருக்கு மடி வலை பயன்படுத்திய 7 மீனவர்கள், படகுடன் சிறைபிடிப்பு
சுருக்கு மடி வலை பயன்படுத்திய 7 மீனவர்கள், படகுடன் சிறைபிடிப்பு
ADDED : மார் 27, 2025 02:09 AM
நாகப்பட்டினம்:நாகையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்திய 7 மீனவர்களை 2 பைபர் படகுகளுடன் போலீசார் சிறை பிடித்தனர்.
தமிழக கடல் பரப்பில் கடல் வளத்தை அழிக்கும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த பெரும்பாலான மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த 27 கிராம மீனவர்கள் நேற்று முன்தினம், கலெக்டர் ஆகாஷை சந்தித்து, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார், நாகை மாவட்ட கடல் பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த சுருக்குமடி வலை விசைப்படகு மீனவர்கள், காரைக்கால் கடல் பகுதிக்கு சென்று தப்பினர்.
அப்போது 2 பைபர் படகுகளில் பூம்புகாரைச் சேர்ந்த 7 மீனவர்கள், கருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. படகுகளுடன் அவர்களை போலீசார் சிறை பிடித்தனர்.
மீன்வளத்துறையினர் படகுகளை பறிமுதல் செய்து, விசாரணைக்கு பின் 7 மீனவர்களையும், மயிலாடுதுறை மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் மீனவ கிராமங்களிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.