UPDATED : நவ 14, 2026 09:36 PM
ADDED : நவ 14, 2026 09:36 PM

சென்னை: தமிழக ஊரக வளர்ச்சித் துறையின், 22 கோடி ரூபாய் காணாமல் போன வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; சென்னையில் மூன்று பேர், சிவகங்கை மற்றும் மதுரையில் தலா இருவர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
தமிழக அரசின், 15வது நிதிக்குழுவின் சுகாதாரத்துறை மானிய நிதி, கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கப்படுகிறது. இந்நிதி, சென்னை நந்தனம், சி.ஐ.டி., நகர் பகுதியில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கி கிளையில், அங்கீகரிக்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் வாயிலாக, ‘ஆன்லைன்’ வழியே மட்டுமே கையாளப்பட்டு வருகிறது.
இந்த கணக்கில் இருந்து நிதியை பெறவும், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கவும், உரிய அனுமதி பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, தனித்தனியே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அக்., 12 முதல், 30ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மர்ம நபர்கள் வங்கி கணக்கில் இருந்து, 22.30 கோடி ரூபாயை, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, மின்னணு பரிவர்த்தனை வாயிலாக மாற்றியுள்ளனர்.
இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரக கண்காணிப்பாளர் ராம்பிரசாத், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், வங்கியின் எஸ்.என்.ஏ., எனப்படும் ஒற்றை கணக்கு நிர்வாகத்துக்காக பயன்படுத்தப்பட்ட இணையதளம் வாயிலாக மோசடி நடந்தது தெரிய வந்தது.
நாகை மாவட்டம் கீழையூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியங்களின், அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் பயனர் முகவரியை முறைகேடாக பயன்படுத்தி, மோசடி நடந்துள்ளது.
குறிப்பாக, Squareuplive.com/rdprd என்ற இணையதளம் வாயிலாக, பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு, பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி, 46 பரிவர்த்தனைகள் வாயிலாக, 22 கோடியே 30 லட்சத்து 4,879 ரூபாய், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மோசடி செய்யப்பட்ட அரசு பணத்தை, வங்கி கணக்குகளில் இருந்து ரொக்கமாக எடுத்து, வேறு கணக்குகளுக்கு மாற்றிய, சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த செல்லபாண்டியன், 56, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கரும்பூர் அண்ணாதுரை, 56, பெங்களூரைச் சேர்ந்த லோகநாதன், 65, ஆகியோர், சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அப்துல் ரஹ்மான், 28, ஜெகதீஷ், 31, ஆகியோர் மதுரையிலும், அஷ்ரப் அலி, கண்ணதாசன் ஆகியோர் சிவகங்கையிலும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏழு மொபைல் போன்கள், 14 சிம் கார்டுகள், வங்கி காசோலை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களில் செல்லபாண்டியன், அண்ணாதுரை, லோகநாதன் ஆகியோர், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேரிடம், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், சைபர் மோசடி கும்பலிடம் இருந்து கமிஷன் பெற்று, தங்கள் வங்கி கணக்குகளை, இவர்கள் பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்த அனுமதித்தது தெரிய வந்துள்ளது. இவர்களின் வங்கி கணக்குகள் வாயிலாக மோசடி பணம், 25 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மோசடி பணம் சென்ற வங்கி கணக்குகளின் உரிமையாளர்களை கண்டறிந்து, அவர்களையும் கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசின் வங்கி கணக்கில் இருந்து நுாதன முறையில் பணத்தை திருடிய கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் யார்? மோசடியின் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘தெரியாதவர்களிடம் பணம் பெறாதீர்’
அரசு துறை மற்றும் நிறுவனங்களின் இணைய வங்கி சேவைகளை கையாளும் அலுவலர்கள், தங்கள் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல், ஓ.டி.பி., மற்றும் அலுவலர் மின்னஞ்சல் விபரங்களை, யாருடனும் பகிரக்கூடாது. கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றி, பல அடுக்கு பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்தி, கணக்கு பரிவர்த்தனைகளை தினசரி கண்காணிக்க வேண்டும். அரசு துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் வங்கி கணக்குகள், வங்கி போர்டல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கமிஷனுக்கு ஆசைப்பட்டு, முன்பின் தெரியாதவர்களின் பணத்தை, தங்கள் வங்கி கணக்கில் பெற்று எடுத்து கொடுப்பதும், வங்கி கணக்கு, ஏ.டி.எம்., கார்டு, சிம் கார்டு ஆகியவற்றை மற்றவர்களுக்கு வழங்குவதும், சைபர் மோசடியில் நேரடியாக பங்கேற்பதற்கு சமமான குற்றம். அவ்வாறு செயல்படுவோர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் மோசடிக்கு உள்ளானால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் உதவி எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
- ஏ.அமல்ராஜ், கமிஷனர், சென்னை காவல் துறை
