கொலைக்கு சதி திட்டம் துப்பாக்கியுடன் சுற்றிய ரவுடி உட்பட 7 பேர் கைது
கொலைக்கு சதி திட்டம் துப்பாக்கியுடன் சுற்றிய ரவுடி உட்பட 7 பேர் கைது
ADDED : அக் 17, 2026 02:31 AM
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே, கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய, பிரபல ரவுடி உட்பட ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, நேற்று அதிகாலை வாகன சோதனையின் போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த இரண்டு கார்களை போலீசார் வழிமறித்து, சோதனை செய்தனர். காரில், ஒரு நாட்டு கைதுப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார், காரில் வந்த திருநெல்வேலி மாவட்டம், மேலயாபாளையம் வெங்கடேஷ், 26, துாத்துக்குடி மாவட்டம் அண்ணாதவரநல்லுார் பகுதியை சேர்ந்த கண்ணன், 22, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த ஸ்ரீதர், 22, கடலுார் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், 33, திருவாரூர் மாவட்டம், பாமணியை சேர்ந்த அன்புராஜ், 21, அபிஷேககட்டளையை சேர்ந்த சிவபாலன், 26, ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள், எட்டு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெங்கடேஷ் மீது, நான்கு கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், திருத்துறைப்பூண்டியில் உள்ள யோகேஷ் என்பவர், வீட்டில் தங்கி கொலை திட்டம் தீட்டுவதற்காக, வந்துள்ளனர். அன்புராஜ் மற்றும் சிவபாலன் ஆகிய இருவரை தவிர, மீதமுள்ளவர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
