கோவையில் சிக்கியது கோகைன் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது
கோவையில் சிக்கியது கோகைன் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது
UPDATED : மார் 29, 2025 05:50 AM
ADDED : மார் 29, 2025 05:41 AM

கோவை : கோவையில் கோகைன் உள்ளிட்ட உயர்ரக போதைப்பொருட்கள் விற்பனை செய்த போலீஸ் எஸ்.ஐ., மகன் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து உயர்ரக போதைப்பொருட்கள் கடத்தி வந்து, கோவையில் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றவாளிகளை பிடிக்க, சிறப்பு படை அமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை, மேட்டுப்பாளையம் ரோடு, பூமார்க்கெட் பகுதியில் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், மேலும் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்து, அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர்கள் மணிகண்டன், 38, விநாயகம், 34, பி.என்.பாளையத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் கிருஷ்ணகாந்த், 34, வடவள்ளி பைனான்சியர் மகாவிஷ்ணு, 28, சுங்கம் ஆதர்ஷ், 24, நஞ்சுண்டாபுரம் ரிதேஷ் லம்பா, 41, ரோகன் செட்டி, 30, என, தெரியவந்தது.
மணிகண்டன் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். அவர்களிடம், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள், 25 லட்சம் ரூபாய் ரொக்கம், பணம் எண்ணும் மிஷின், எடை மிஷின், மூன்று கார்கள், 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழு பேரையும், கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதில், மகாவிஷ்ணு, கோவை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.ஐ., விஜயலட்சுமியின் மகன். இவர், போதைப்பொருள் கடத்தல் குழுவுக்கு, பைனான்சியராக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள், மும்பை போன்ற நகரங்களில் இருந்து கூரியரிலும், நேரிலும் போதைப்பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போத்தனுாரில், போதை பயன்பாட்டுக்கான, 3,000 மாத்திரைகளுடன் இருந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.