70 'சீட்' - துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு துாண்டில் போட்ட த.வெ.க.,
70 'சீட்' - துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு துாண்டில் போட்ட த.வெ.க.,
ADDED : ஆக 23, 2025 02:24 AM

தமிழகத்தில், 100 தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளை, காங்கிரஸ் மேலிடம் துவக்கியுள்ள நிலையில், த.வெ.க., தரப்பில், 70 தொகுதிகள் ஒதுக்கவும், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவும், திரைமறைவில் பேச்சு நடத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 2 நாள் பயணமாக சென்னை வந்தார். தமிழகம், புதுச்சேரி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தினார்.
தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கடந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 26 தொகுதிகளில் வென்றது. இந்த 26 தொகுதிகள் எவை, இரண்டாவது இடத்திற்கு வந்த தொகுதிகள் எவை என கண்டறிந்து, அவற்றுடன் தற்போதைய 17 தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம், 100 தொகுதிகளை அடையாளம் காணும் பணியை, தமிழக காங்., நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
கட்சியின் டில்லி மேலிட ஒப்புதலுடன், இந்த பணி ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆலோசிப்பதற்காகவே, கிரிஷ் சோடங்கர் வந்தார்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்கு, த.வெ.க., தரப்பில் இருந்து துாது வந்துள்ளது. 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு தர தயாராக இருப்பதாக, புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர் ஒருவர் வாயிலாக, த.வெ.க., தரப்பில் பேசப்பட்டுள்ளது.
'தி.மு.க., கூட்டணியில், தற்போது காங்கிரஸ் நீடிக்கிறது. காங்கிரஸ் மேலிடமும், தி.மு.க., கூட்டணியில் உறுதியாக இருப்பதால், இப்போதைக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால், தேர்தல் நெருக்கத்தில், தொகுதி பங்கீட்டின் போது, காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க.,வால் முடியாமல் போகலாம். அந்த சமயத்தில், காங்., தலைமை மாற்று கூட்டணிக்கு யோசிக்கும். அப்போது, த.வெ.க., கூட்டணிக்குத்தான், காங்., வந்தாக வேண்டும். அதுவரை, பொறுமையாகத்தான் எதையும் அணுக வேண்டும். இருந்தாலும், காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வாயிலாக, கட்சியின் தேசிய தலைமைக்கு, தமிழக சூழ்நிலைகள் தெரிவிக்கப்படும். அங்கிருந்து நல்ல செய் தி வந்ததும் தெரிவிக்கப்படும். அதுவரை, இரு கட்சியினரும் தொடர்பிலேயே இருக்கலாம்' என த.வெ.க., தரப்புக்கு காங்., தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனால் தான், மதுரை மாநாட்டில், தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க.,வை விமர்சித்த விஜய், காங்கிரஸ் குறித்து வாய் திறக்காமல், பேச்சை முடித்துக் கொண்டு விட்டார்.
இவ்வாறு அந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.
-நமது நிருபர்-