பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
UPDATED : மார் 17, 2024 04:27 PM
ADDED : மார் 17, 2024 12:17 PM

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குளித்தலை அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.5.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மாநில அரசு என அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம், 3 ஷிப்ட்களுக்கு கண்காணிப்பில் ஈடுபட 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் சென்றால் பணத்தை பறிமுதல் செய்ய பறக்கும் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
சோதனை
கரூர், குளித்தலை அருகே மாவட்ட எல்லையான மருதூர் சோதனைச் சாவடியில் அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவரின் காரை சோதனை இட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 4,80,000 பணம் கொண்டுவரப்பட்டது தெரியவந்ததை அடுத்து அதனை பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி மணப்பாறையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் காரை சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி 1,03,500 பணத்தினையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் உரிய ஆவணங்களின்றி இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5, 83,500 பணத்தினை குளித்தலை கோட்டாட்சியர் தனலட்சுமி வசம் ஒப்படைத்தனர்.
குளித்தலை - கரூர் மெயின்ரோட்டில் மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டதில் திருச்சியைச் திரு.விஜயகுமார் ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்தொகை பாதுகாப்புக்காக குளித்தலை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, உரிய ஆவணம் இன்றி பணத்தை லாரியில் எடுத்து சென்ற ரூ 2.51 லட்சம் பணத்தை வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் பறிமுதல் செய்தனர். மேட்டுப்பாளையத்தில் வாகன சோதனையின் போது, உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.6.22 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

