தமிழகத்தில் 100 வயதை கடந்து ஓய்வூதியம் பெறும் 73 பேர்
தமிழகத்தில் 100 வயதை கடந்து ஓய்வூதியம் பெறும் 73 பேர்
ADDED : ஏப் 27, 2025 01:33 AM
சென்னை: தமிழகத்தில், 100 வயதை கடந்த, 73 பேர் ஓய்வூதியம் பெற்று வருவதாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த நிதி, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் பேசியதாவது:
தமிழகத்தில், 7.12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்காக, 2025 - -26ல், 46,124 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 100 வயதை கடந்த, 73 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அதில், 108 வயதான நாகையை சேர்ந்த கோபாலகிருஷ்ணனும் ஒருவர். 107 வயதான திருக்கோவிலுாரை சேர்ந்த ஆரோக்கியமேரி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பாலம்மாள் ஆகியோரும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
அவர்கள் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து, நம்மை வாழ்த்த வேண்டும். மகான் ராமானுஜர், 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என, வைணவ சம்பிரதாயத்தினர் சொல்வர். 100 வயதை கடந்தும் ஓய்வூதியம் பெறுவோர், ராமானுஜரை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

