பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு 73,000 விண்ணப்பங்கள்; தமிழகம் 'டாப்'
பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு 73,000 விண்ணப்பங்கள்; தமிழகம் 'டாப்'
ADDED : ஏப் 08, 2024 06:53 AM

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு, சுவிதா இணையத்தில் இதுவரை 73 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக, 23,239 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
வரும் 19ம் தேதி முதல், 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷனிடம், அரசியல் கட்சிகள் அனுமதி பெற வேண்டும். இதற்காக, 'சுவிதா' இணையதளத்தை தேர்தல் கமிஷன் உருவாக்கியது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் தொடர்பான செயல்பாடுகளுக்கு அனுமதி கேட்டு சுவிதா இணையதளத்தில் 73,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 44,600 வேண்டுகோள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
மேலும், 11,200 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 10,819 விண்ணப்பங்கள் செல்லாதது என்பதால் ரத்து செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசாரம் செய்ய, அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 23,239 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

