ரூ.7700 கோடிக்கு பயிர் கடன் கூட்டுறவு வங்கிகள் தாராளம்
ரூ.7700 கோடிக்கு பயிர் கடன் கூட்டுறவு வங்கிகள் தாராளம்
ADDED : நவ 07, 2024 02:33 AM
சென்னை:மழை பொழிவு சாதகமாக இருப்பதால், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்க, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு நிதியாண்டில் அக்., வரை, 8.50 லட்சம் பேருக்கு, 7,700 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கடனளிப்பு, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 7,200 கோடி ரூபாயாக இருந்தது.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், அனைத்து பிரிவுகளிலும் நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக, 1.03 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதிக அளவாக நகை கடன் பிரிவில், 57,563 கோடி ரூபாயும்; பயிர் கடன் பிரிவில், 16,500 கோடி ரூபாயும் கடன் வழங்கப்பட உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் அக்., வரை, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு மழை பொழிவு நன்கு உள்ளது. இதனால், பயிர் சாகுபடியில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட, பயிர் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே, இந்த நிதியாண்டில் அக்., வரை, 8.50 லட்சம் விவசாயிகளுக்கு, 7,700 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 7.50 லட்சம் விவசாயிகளுக்கு, 7,200 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டிருந்தது.
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, ஏப்., முதல் அக்., வரை, 47,000 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.