ADDED : செப் 24, 2024 07:05 AM
சென்னை, : சென்னை கலைவாணர் அரங்கத்தில், 'உறுப்பு தான தினம் - 20௨4' நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு பங்கேற்று, உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டனர். மேலும், உடல் உறுப்பு தானம் வழங்கிய கொடையாளர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 2008ல் இருந்து இதுவரை, 1,998 பேர் உடல் உறுப் புகள் தானம் அளித்துள்ளனர். அவை, 4,204 பேருக்கு பயன்படுத் தப்பட்டு உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை என்ற அறிவிப்புக்கு பின், 272 பேர் உடல் உறுப்புகள் தானம் அளித்துள்ளனர். மேலும், 14,300 பேர் உடலுறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.
தற்போது, சிறுநீரகம் வேண்டி, 7,106 பேர்; கல்லீரல், 416 பேர்; இதயம் 83 பேர்; நுரையீரல் 54 பேர்; இதயம் மற்றும் நுரையீரல் 24 பேர்; கணையம், கைகள், சிறுகுடல், வயிறு உள்ளிட்ட உறுப்புகள் வேண்டி, 7,797 பேர் காத்திருக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும், பாம்பு கடி, நாய்க்கடிக்கு போதிய அளவில் மருந்துகள் உள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அனைத்து மருத்துவமனைகளிலும் கட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி முதல்வராக இருந்த போது ஏற்படுத்தப்பட்ட கட்ட மைப்புகள் குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளுக்காக பதிவு செய்தவர்கள், மூன்று, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பது தெரிய வந்துள்ளது.