அக்னி சட்டியால் ஆக்ரோஷமான குளவிகள் கொட்டி 79 பேர் காயம்: கோவில் திருவிழாவில் பகீர்
அக்னி சட்டியால் ஆக்ரோஷமான குளவிகள் கொட்டி 79 பேர் காயம்: கோவில் திருவிழாவில் பகீர்
ADDED : மே 03, 2025 01:27 AM

நாமக்கல்: கோவில் திருவிழாவில் அக்னி கரகம் எடுத்துச் சென்றபோது, அதிலிருந்து எழுந்த புகையால், மரத்தில் கட்டியிருந்த கூடு கலைந்து, ஆக்ரோஷமான குளவிகள் பறந்து வந்து கொட்டியதில், 79 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு விழா, கடந்த 9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
ஏப்., 28ல் பால்குட ஊர்வலம்; 29ல் வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைத்தல்; 30ல் காவிரி தீர்த்தம் எடுத்து வருதல் என விழா களைகட்டியது. நேற்று முன்தினம், பொங்கல், மாவிளக்கு பூஜைகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, பக்தர்கள் அக்னி சட்டி, அக்னி கரகம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது, அக்னி சட்டியில் இருந்து எழுந்த புகை, சாலையோரம் உள்ள புளியமரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டை தாக்கியது.
இதனால் ஆக்ரோஷமான குளவிகள் கூட்டைவிட்டு வெளியேறி, பக்தர்களை வளைத்து வளைத்து கொட்டியது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இருந்தும், துரத்தி துரத்தி குளவி கொட்டியதில், 79 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, நாமக்கல் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், 'புளியமரத்தில் உள்ள குளவி கூட்டை இரவில் தான் அப்புறப்படுத்த முடியும்' என தெரிவித்தனர். கோவில் விழாவில் பக்தர்களை குளவி கொட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.