சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து பெண் உட்பட 8 பேர் பலி; 5 பேர் படுகாயம்
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து பெண் உட்பட 8 பேர் பலி; 5 பேர் படுகாயம்
UPDATED : ஜூலை 02, 2025 08:38 AM
ADDED : ஜூலை 02, 2025 08:25 AM

சிவகாசி: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், எட்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர். விபத்தில், ஆலையின் எட்டு அறைகள் தரைமட்டமாகின.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி -அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, 'கோகுலேஷ்' பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. வழக்கம் போல நேற்று தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது, மருந்து செலுத்தும் அறையில், காலை 8:45 மணி அளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
இதில், மீனம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம், 55, விருதுநகர், ஓ.கோவில்பட்டி ராமமூர்த்தி, 38, சூலக்கரை வைரமணி, 32, அனுப்பன்குளம் லட்சுமி, 22, செல்லபாண்டி, சேர்வைக்காரன்பட்டி ராமஜெயம், 27, நாகபாண்டி, புண்ணியமூர்த்தி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.மேலும், சேர்வைக்காரன் பட்டி அழகுராஜா, 27, சாத்துார் செவல்பட்டி லிங்கசாமி, 45, மத்திய சேனை கருப்பசாமி, 27, வி.ராமலிங்கபுரம் வ.உ.சி., தெரு மணிகண்டன், 40, சூலக்கரை முருகலட்சுமி, 48, ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சாத்துார் டவுன் போலீசார், ஆலையின் உரிமையாளர் கமல்குமார், இடத்தின் உரிமையாளர் மாயக்கண்ணன், சல்பர் உரிமையாளர் செல்வம், மேலாளர் விஜய் மற்றும் போர்மேன்கள் ரவி, நடராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், ரவியை நேற்று கைது செய்தனர்.பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். சம்பவ இடத்தை கலெக்டர் சுகபுத்ரா, எஸ்.பி., கண்ணன் பார்வையிட்டனர்.
கலெக்டர் கூறுகையில், “இதுவரை எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; ஐந்து தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்தும், ஆலையில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுக்கு பின் தெரியவரும். பட்டாசு ஆலைகளில் விபத்து நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என்றார்.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
உறவினர்கள் தர்ணா
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான எட்டு பேரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகையை பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரப்படி மாநில அரசு, 20 லட்சம், ஆலை நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.