sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு உத்தரவை மீறி 800 ஆம்னி பஸ்கள்

/

அரசு உத்தரவை மீறி 800 ஆம்னி பஸ்கள்

அரசு உத்தரவை மீறி 800 ஆம்னி பஸ்கள்

அரசு உத்தரவை மீறி 800 ஆம்னி பஸ்கள்

6


UPDATED : ஜூன் 19, 2024 12:07 AM

ADDED : ஜூன் 18, 2024 11:58 PM

Google News

UPDATED : ஜூன் 19, 2024 12:07 AM ADDED : ஜூன் 18, 2024 11:58 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வெளிமாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்களை, தமிழகத்தில் பதிவு செய்து உரிமம் பெறுவதற்கு விதித்த கெடுவை கண்டுகொள்ளாத, 800 பேருந்துகளை பார்த்த இடத்தில் பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

--தமிழகத்தில், 2,478 ஆம்னி பஸ்கள் ஓடுகின்றன. இவற்றில், 900க்கும் மேற்பட்ட பஸ்கள் வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை. அருகில் உள்ள புதுச்சேரி துவங்கி, வடகிழக்கு மூலையில் உள்ள நாகாலாந்து வரை வெவ்வேறு மாநிலத்தின் நம்பர் பிளேட்டை பொருத்திக்கொண்டு, இவை தமிழக மக்களுக்கு சேவை செய்கின்றன.

வருவாய் இழப்பு


''தமிழகத்தை விட அந்த மாநிலங்களில் பதிவு கட்டணம், சாலை வரி, புரோக்கர் கமிஷன், அதிகாரிகள் லஞ்சம் எல்லாம் மிகவும் குறைவு. மாதக்கணக்கில் அலைய விடாமல், ஓரிரு நாட்களில் வேலையை முடித்து சான்றிதழ் தருகின்றனர். எனவே தான் அங்கு போகிறோம்,'' என, ஆம்னி பஸ் அதிபர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், பதிவு கட்டணம், உரிம கட்டணம் வெளி மாநில அரசுக்கு செல்வதால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த பஸ்களை தமிழகத்தில் மறு பதிவு அல்லது பதிவு மாற்றம் செய்து முறையான உரிமம் பெற வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. அதற்கான கால நிர்ணயமும் செய்தது.

திருவிழா காலம், தேர்தல் நேரம் என பல காரணங்கள் சொல்லி, பஸ் உரிமையாளர்கள் அவகாசம் கேட்டனர். அடுத்தடுத்து நான்கு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது; நேற்றுடன் அது முடிந்தது.

இருப்பினும், 105 பஸ்கள் மட்டுமே, தமிழக பதிவுக்கு மாறின. இன்னும், 800 பஸ்கள் டி.என்., என, துவங்கும் வாகன பதிவெண் பெறவில்லை. தொடர்ந்து, தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் ஒரு அறிக்கை வெளியிட்டார்:

ஆம்னி பஸ்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும், அரசுக்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கட்டணம், 1.08 லட்சம் ரூபாய். அந்த வகையில், இந்த பஸ்களால் ஆண்டுக்கு தலா, 4.32 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. 800 பஸ்களுக்கு கணக்கிட்டால், ஆண்டுக்கு, 34.56 கோடி ரூபாயை தமிழக அரசு இழக்கிறது.

இதை தவிர, பயண கட்டணங்களை தன்னிச்சையாக கூட்டியும் குறைத்தும் இயக்குவதால், அரசு பஸ்கள் மற்றும் முறையான அனுமதி பெற்ற ஆம்னி பஸ்களின் இயக்கம் சீர்குலைகிறது.

விதிகளை மீறி இயக்குவதால், விபத்து ஏற்படும் போது பயணியருக்கு இழப்பீடு கிடைக்காத நிலை உள்ளது. இனிமேலும் இந்த குற்றங்களை அனுமதிக்க முடியாது. பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து, பதிவெண்ணும், அனுமதிச்சீட்டும் பெறுகின்றனர் என்பது குறித்தும், ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, தமிழக பதிவும், உரிமமும் பெறாத ஆம்னி பஸ்களை சாலையில் கண்டால், உடனே பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளோம்.

அந்த பஸ்களின் விபரம், www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. அவற்றில் முன்பதிவு செய்திருந்தால், உடனே ரத்து செய்யுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அரசு உத்தரவில் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

ஆனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், இந்த பிரச்னையும் வழக்கம் போல சில நாட்களில் சுமுகமாக தீர்ந்து விடும் என்று நம்புகின்றனர். அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியதாவது:

வெளி மாநிலங்களில் பதிவு செய்துள்ள பஸ்களுக்கான கடன் நிலுவையில் உள்ளது. அதை அடைத்து, வங்கியில் தடையில்லா சான்று பெற்று தான் இங்கே மறுபதிவு செய்ய முடியும்.

இந்த நடைமுறை முடிய ஒரு மாதத்துக்கு மேலாகும். அதுவரை பஸ்களை இயக்க முடியாது. ஆனால், ஊழியர்கள் சம்பளம் முதலான செலவுகளை செய்தாக வேண்டும்.

முன்பதிவு இல்லை


நாங்கள் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை. குறைந்த கட்டணத்தையும், வேகமான சேவையையும் பயன்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவு தான். தமிழக அரசும் அதே பாணியை பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.

அரசின் உத்தரவை ஏற்று, வெளி மாநில பதிவெண் கொண்ட பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைக்கிறோம். அந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யவில்லை.

அதனால், மக்களுக்கு பாதிப்பு இல்லை. பஸ்களை வீணாக நிறுத்தி வைக்காமல் விரைவாக அரசு மறுபதிவு செய்து தர வேண்டும். அதுவரை அவகாசம் கேட்போம். இவ்வாறு அன்பழகன் கூறினார்.

டிராவல்ஸ்?

வெளிமாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்களில் பெங்களூரின் வெற்றி டிராவல்ஸ் 51 பஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாதை சேர்ந்த ஆரஞ்ச் டிராவல்ஸ், 50; பெங்களூருவைச் சேர்ந்த கிரீன்லைன் டிராவல்ஸ் 40 பஸ்கள் வைத்துள்ளன.








      Dinamalar
      Follow us