இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
UPDATED : ஜூலை 04, 2025 02:39 PM
ADDED : ஜூலை 04, 2025 02:36 PM

புதுடில்லி: ''தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது,'' என்று துணை ராணுவ தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த ராணுவம் தொடர்பான நிகழ்ச்சியில், துணை ராணுவ தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை எவ்வாறு செயல்பட்டது என்பது முக்கியம். நமக்கு எல்லை ஒன்று தான்; ஆனால் எதிரிகள் மூன்று பேர் இருந்தனர். தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது.
81 சதவீத உபகரணங்கள்
பாகிஸ்தான் நாட்டின் மொத்த ஆயுதங்களில் 81 சதவீதம் சீனா வழங்கியது. துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. ராணுவத்துக்கு ஒரு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு தேவை. தொழில்நுட்பம் பயன்படுத்தியும், உளவுத்தகவலை பயன்படுத்தியும், பாகிஸ்தானில் 21 பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 9 இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன.
ராணுவ இலக்கு
நாம் ஒரு ராணுவ இலக்கை அடையும்போது, அதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். போரைத் தொடங்குவது எளிது, ஆனால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே அது மிகவும் திறமையான தாக்குதல் என்று நான் கூறுவேன். சரியான நேரத்தில் போரை நிறுத்த வேண்டும். இந்திய ராணுவம், அனைத்து வழிமுறைகளிலும் போரை எதிர்கொள்ள தயாராக இருந்தாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.