ஓ.பி.ஜி., குழும தலைவர் வீட்டில் ரூ.8.38 கோடி பறிமுதல்
ஓ.பி.ஜி., குழும தலைவர் வீட்டில் ரூ.8.38 கோடி பறிமுதல்
ADDED : நவ 14, 2024 04:33 AM

சென்னை : சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு, 1,148 கோடி ரூபாயை, போலி நிறுவனங்கள் பெயரில், பங்கு சந்தையில் முதலீடு செய்த, ஓ.பி.ஜி., குழுமத்தின் நிறுவனம் மற்றும் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, 8.38 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில், நிலக்கரி மற்றும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யும், ஓ.பி.ஜி., குழுமத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிறுவனம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓ.பி.ஜி., குழுமத்தின் தலைவராக அரவிந்த் குப்தா உள்ளார்.
அவர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இரண்டு நாட்களாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள, ஓ.பி.ஜி., குழுமத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், சோதனை நடத்தினர்.
சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சென்னையில் உள்ள அரவிந்த் குப்தா வீட்டில் இருந்த, 8.38 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அரவிந்த் குப்தா மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், ஆப்பிரிக்காவில் உள்ள தீவு ஒன்றில், போலி பெயரில் நிறுவனம் துவங்கி, அதில் இருந்து, ஓ.பி.ஜி., குழுமத்திற்கு, 1,148 கோடி ரூபாய் முதலீடு வந்து இருப்பதாக, கணக்கு காட்டயதும், அந்த தொகையை, ரியல் எஸ்டேட், பங்கு சந்தையிலும் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும், சட்ட விரோதமாக, சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் நாடுகளில் உள்ள, தங்களின் நிறுவனங்களுக்கும் அனுப்பியது தெரிய வந்துள்ளது. போலி நிறுவனங்கள் துவங்கியது மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.