ADDED : பிப் 06, 2025 01:42 AM

சென்னை:'சைபர் குற்றவாளிகள், 861 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 83.34 கோடி ரூபாய், புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.
சைபர் குற்றங்களை தடுப்பதில், போலீசாருக்கு சவாலாக உள்ள, தொழில் நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண, உதவி செய்யும் வகையில், கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற 'ஹேக்கத்தான்' போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு, ஒரு லட்சம், 75,000, 50,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும், 12 அணிகளுக்கு தலா, 5,000 ரூபாய், ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், பரிசு தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, சைபர் குற்றப் பிரிவு தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறியதாவது:
சைபர் குற்றங்கள் தொடர்பாக, தினமும், 1930 என்ற உதவி எண்ணிற்கு, 750 அழைப்புகள் வருகின்றன.
மோசடி குறித்து, இணையதளம் வாயிலாக, 450 புகார்கள் பதிவாகின்றன.
கடந்த ஆண்டு, தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து, சைபர் குற்றவாளிகள், 1,673.85 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இவற்றில், 771.98 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளது.
சைபர் குற்றவாளிகள் 861 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 83.34 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களில் 35 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி உள்ளனர். சைபர் ரோந்து குழு வாயிலாக, 15 போலி இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.
மோசடிகளை ஊக்குவித்த, 121 வாட்ஸாப் குழுக்கள்; சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட, 2.04 லட்சம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.