'ஞான பாரதம்' திட்டத்தில் 88,000 சுவடிகள் டிஜிட்டல் மயம்
'ஞான பாரதம்' திட்டத்தில் 88,000 சுவடிகள் டிஜிட்டல் மயம்
ADDED : ஜூலை 22, 2026 12:29 AM

சென்னை: மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில் செயல் படுத்தப்படும், 'ஞான பாரதம்' திட்டத்தின் கீழ், 88,000 சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன.
நாட்டில் உள்ள ஓலைச்சுவடிகள், மரப்பட்டைகள், கையால் தயாரிக்கப்பட்ட காகிதங்கள், துணிகளில் எழுதப்பட்டுள்ள பழங்கால கையெழுத்து பிரதி களை சேகரித்து, 'ஸ்கேன்' செய்து, டிஜிட்டல் முறையில், அனைவரும் அறியும் வகையில், இணைய வழியில் பகிர்வதற்காக, மத்திய அரசு, 491.66 கோடி ரூபாய் நிதியில், கடந்த ஆண்டு, 'ஞான பாரதம்' திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தில், பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல், கல்வெட்டியல் துறையில், நவீன ஸ்கேனர் வாயிலாக, 83,045 காகித சுவடிகள், 5,772 பனை ஓலைகள், 3 பீர்ச் மரப்பட்டைகள் என, மொத்தம் 88,820 ஆவணங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, gyanbharatam.com என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன.
அவற்றில் உள்ள மொழி, எழுத்து வடிவம், எழுதப்பட்ட காலம், பின்னணி ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன. சுவடிகளை, மாநிலம், மாவட்டம், மொழி, பொருள் எனும் அடிப் படையில் தேடலாம். இதில், அதிகளவில் தமிழ், சமஸ்கிருத மொழி சுவடிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து, ஹிந்தி, பிராகிருதம், பாரசீக மொழிகள், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி ஆவணங்கள் உள்ளன .
தமிழில், சித்த மருத்துவம், வர்மக் கலை, சங்க இலக்கியம், இலக்கணம், உரைகள், சமய நுால்கள், கோவில் கட்டடக்கலை, வழிபாட்டு முறைகள், சோழர், பாண்டியர் கால கோவில் வரலாறு கள், வானியல், கணிதம், ஜோதிடம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆவணங்கள் உள்ளன.
