சைபர் குற்றங்களில் 90 சதவீதம் உளவியல் ரீதியானவை புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் பேச்சு
சைபர் குற்றங்களில் 90 சதவீதம் உளவியல் ரீதியானவை புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் பேச்சு
ADDED : ஆக 18, 2025 01:30 AM

சென்னை: ''இணையதளங்களில் தற்போது நடத்தப்படும் சைபர் குற்றங்களில், 90 சதவீதம் உளவியல் சார்ந்தவை,'' என, புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் கூறினார்.
'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா' மற்றும், 'பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்' நிறுவனம் சார்பில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆயிரம் பேர் இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேசியதாவது:
வாழ்க்கையில் பிரச்னைகள் வராத வரை, நாம் எதையும் கற்றுக்கொள்ள மாட்டோம். பிரச்னை வரும் போது தான், அனைத்தையும் அறிந்து கொள்வோம்.
அதேபோல தான் சைபர் கிரைம் குற்றங்களும். இப்போது, நம்மை சுற்றி ஆயிரம் பேர் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
'சைபர் கிரைம்' குற்றவாளிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். சைபர் குற்றங்கள் தொடர்பாக பலருக்கு தெரிவதில்லை.
இப்போது எல்லாம் உணர்ச்சிகளை துாண்டி, சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. ஒரு பொருள் திருட்டு போனால், போலீசிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் கண்டுபிடித்து விடுவர்.
சைபர் குற்றங்களை பொறுத்தவரை, முதலில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நாம் விழிப்புணர்வுடன் இல்லையெனில், போலீசாரால் ஒன்றும் செய்ய முடியாது.
நம்மை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். 'பாஸ்வேர்டு' என்பது உள்ளாடை போன்றது. அதை யாரிடமும்பகிரக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி, 'சைபர் கிரைம்' எஸ்.பி., பாஸ்கரன் பேசியதாவது:
இன்றைய கால கட்டத்தில், இணைய தளங்களில் நடத்தப்படும், 'சைபர்' குற்றங்களில், 90 சதவீதம் உளவியல் சார்ந்தவை. நாம் சொந்த உறவுகளுடன் பேசாமல், சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கிறோம்.
நாம் தனிமையில் இருப்பதை அறிந்து, பலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். சைபர் குற்றம் குறித்து பயப்படாமல், அதன் விபரத்தை சொந்த உறவுகளிடம் தெரிவிக்க வேண்டும்.
இப்போது எல்லாம், போலி இ - மெயில், போலி இணையதளங்கள் அதிகம் உருவாக்கப்படுகின்றன. இதைக் கண்டுபிடிப்பது எளிது. அது குறித்த விழிப்புணர்வு அவசியம்.
பயப்படாதீங்க தற்போது, டிஜிட்டல் கைது மோசடி அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் கைது என்ற ஒன்றே கிடையாது. அதுபோன்ற அச்சுறுத்தல் அழைப்பு வந்தால், பயப்படாமல், 'கட்' செய்து விடுங்கள், இல்லையெனில், அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு செல்கிறேன் என்று கூறுங்கள். அதுவே தீர்வு.
சைபர் குற்றங்களை தடுக்க, மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
சைபர் குற்றங்கள் வழியே பணத்தை இழந்தவர்கள், தங்கள் புகார்களை, '1903' அல்லது மத்திய அரசின் சைபர் குற்றங்கள் புகார் தொடர்பான இணைய தளங்களில் பதிவு செய்யலாம்.
நிறுத்தி வைக்கப்படும் அவ்வாறு செய்தால், நம்மிடம் இருந்து திருடப்பட்ட பணம், எத்தனை வங்கி கணக்கிற்கு பகிரப்பட்டாலும், அதை பயன்படுத்த முடியாத வகையில் நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், 'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா'வின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. புதிய தலைவராக பாலு சுவாமிநாதன், செயலராக விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.