போதைப்பொருள் கடத்தலுக்கு 90% போலீசார் உடந்தை: கணக்கு சொல்கிறார் ராமதாஸ்
போதைப்பொருள் கடத்தலுக்கு 90% போலீசார் உடந்தை: கணக்கு சொல்கிறார் ராமதாஸ்
ADDED : செப் 19, 2024 01:54 PM

திண்டிவனம்: 'போதைப்பொருட்கள் கடத்தலுக்கு, 10 சதவீத போலீசாரை தவிர மற்ற 90 சதவீத பேரும் உடந்தையாக உள்ளனர்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் அவர் அளித்த பேட்டி: வேட்பாளருக்கு பதிலாக கட்சிக்கு ஓட்டளிக்கும் முறை கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஒரே நாடு, ஒரே தேர்தல்' விவகாரத்தில் பல சிக்கல்கள், ஐயங்கள் உள்ளன. அதனை மத்திய அரசு போக்க வேண்டும். போதைப்பொருட்கள் கடத்தலுக்கு, 10 சதவீத போலீசாரை தவிர மற்ற 90 சதவீத பேரும் உடந்தையாக உள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு உத்தியோகம் தேவையா? லஞ்ச மூட்டை வந்தால் போதும் என கருதும் போலீசார்களை தண்ணியில்லா நாட்டுக்கு மாற்ற வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
தமிழகத்தில் சராசரியாக வீட்டுக்கு ஒரு குடிகாரரை உருவாக்கிய நிலையில் கஞ்சா, போதைப்பொருட்கள் புழக்கமும் அதிகரித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வரவேற்கத்தக்கது. குரூப் 4 தேர்வு 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நிலையில், வெறும் 7,024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமில்லை. எனவே தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பணியிட எண்ணிக்கையை 15 ஆயிரம் ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.