ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்ததால் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை; வைரலாகுது ஆடியோ
ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்ததால் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை; வைரலாகுது ஆடியோ
ADDED : நவ 21, 2025 04:43 AM

வால்பாறை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்தம் காரணமாக, 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியை சேர்ந்த சக்திவேல் - வல்சலா தம்பதியின் மகள் சஞ்சனா,13. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில், மொத்தம் 44 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பில் மட்டும், 13 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த அக்., 10ம் தேதி மாணவி சஞ்சனா,13, வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். தீ காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதனிடையே, மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது பேசிய ஆடியோவில், 'பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் முன்னிலையில் என்னை இழிவுபடுத்தும் வகையில் திட்டினர். நல்லா படிக்கும் என்னை, சரியாக படிக்காத மாணவர்களுடன் அமர்ந்து படிக்க வைத்தனர். இதனால் எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்தமே, தற்கொலை எண்ணத்துக்கு காரணம்,' என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் மாணவின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். இதையடுத்து போலீசார் பேச்சு நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததால், உடலை பெற்றனர்.
இதனிடையே, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் மணிமாலா, வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் ஆகியோர், பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். மாணவி இறப்பு குறித்து சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

