sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவி விவகாரத்தில் விசாரணை நடத்த 3 பேர் குழு!

/

மாணவி விவகாரத்தில் விசாரணை நடத்த 3 பேர் குழு!

மாணவி விவகாரத்தில் விசாரணை நடத்த 3 பேர் குழு!

மாணவி விவகாரத்தில் விசாரணை நடத்த 3 பேர் குழு!

1


ADDED : டிச 28, 2024 11:39 PM

Google News

ADDED : டிச 28, 2024 11:39 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிக்க, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது வெளியில், எப்.ஐ.ஆர்., வெளியானதற்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், கட்டணம் எதுவும் வசூலிக்காமல், மாணவி தன் படிப்பை தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் தாக்கல் செய்த பொது நல மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

பார்வையிடலாம்


மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், தமிழ்செல்வன், ஜி.எஸ்.மணி ஆகியோர் ஆஜராகினர்.

அரசு, போலீஸ் மற்றும் அண்ணா பல்கலை தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் பி.குமரேசன், ரவீந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அப்போது, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:

சி.சி.டி.என்.எஸ்., என்ற குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் முறையில், பிரத்யேக வலைதளம் வாயிலாக, வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த வலைதளம், 'நிக்' என்ற தேசிய தகவல் மையத்தால் பராமரிக்கப்படுகிறது. இதில், பதிவேற்றம் செய்யும் முதல் தகவல் அறிக்கையை பார்வையிட முடியும்.

முதல் தகவல் அறிக்கையை பார்வையிட விரும்புபவர், பெயர், மொபைல் போன் எண் விபரங்களை பதிவிட வேண்டும். பின், மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., வரும். அதை பதிவிட்டு, விபரங்களை பார்வையிடலாம்.

இந்த தளத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், அவற்றை யாரும் பார்வையிட முடியாது. பதிவேற்றம் செய்யும் போதே, 'லாக்' செய்யப்பட்டு விடும். புதிய குற்றவியல் சட்டத்துக்கு ஏற்ப, சிஸ்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகி விட்டது. இருப்பினும், உடனே அது, 'லாக்' செய்யப்பட்டு, யாரும் பார்வையிட முடியாதவாறு முடக்கப்பட்டு விட்டது.

தற்போது தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், சி.சி.டி.என்.எஸ்., வலைதளத்தில் இருந்து, 14 பேர் முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்துள்ளனர்; பொது வெளியில் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது.

முதல் தகவல் அறிக்கையை, காவல் துறை வெளியிடவில்லை; முற்றிலும் தொழில்நுட்ப தவறு தான்.

'இதுவரை நடந்த விசாரணையில், ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்' என்று தான் சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற முடிவுக்கு, அவர் வரவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது.

தொடர் விசாரணை


அரசு மற்றும் காவல் துறை, பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பான தங்கள் பொறுப்பை அறிந்திருக்கிறது. அதேபோல, மற்றவர்களும் பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்; தொடர் விசாரணை நடந்து வருகிறது.

அதிகாரிகள் பணி விதிகளின்படி, செய்தியாளர்களை சந்திக்க எந்த தடையும் இல்லை. அரசிடம் முன் அனுமதியும் பெற வேண்டியதில்லை. முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில்,ஆணிவேர் வரை விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் வாதாடினார்.

அண்ணா பல்கலை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதாடியதாவது:

பாதிக்கப்பட்ட மாணவி பக்கம், அண்ணா பல்கலை உள்ளது. பல்கலை வளாகம், 189 ஏக்கர் பரப்பு உடையது. வளாகத்தின் அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகம் முழுதும், 988 'சிசிடிவி'க்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில், 849 செயல்பாட்டில் உள்ளன; மற்றவை செயல்படவில்லை. 'சிசிடிவி' பதிவுகள் முழுதும் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. வழக்கு விசாரணைக்கு, அண்ணா பல்கலை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 'கவுன்சிலிங்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவி, அவரின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். மாணவி பல்கலையில் தொடர்ந்து படிப்பை மேற்கொள்ளலாம். மாணவர்கள் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, அண்ணா பல்கலை நிரந்தர கமிட்டி அமைத்துள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில், 'கைதான நபர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அவர் தி.மு.க., நிர்வாகி தான். இல்லை என மறுக்க முடியாது' என்று கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

போலீஸ் அதிகாரிகள் மற்றும் அண்ணா பல்கலை நிர்வாகம் மத்தியில், பல குறைபாடுகள் உள்ளன என்பதால், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவிடம் புலன் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்ற அட்வகேட் ஜெனரல், சிறப்பு புலனாய்வு குழு நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார். மூன்று அதிகாரிகளின் பெயரை அவர் பரிந்துரைத்தார்.

அதன்படி, ஐ.பி.எஸ்., அதிகாரிகளான, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேஹ பிரியா, ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் நகர துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழு புலனாய்வு மேற்கொண்டு, இரண்டு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகள் எந்த பதவியில் இருந்தாலும், சமூகத்தில் எந்த அளவுக்கு உயர்ந்தவராக இருந்தாலும், அவர்களை விடக்கூடாது.

புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான உதவிகளை, டி.ஜி.பி., வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பை வழங்கும்படி, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டதில், போலீஸ் துறையின் குறைபாடு காரணம் என்பதாலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காகவும், இடைக்கால இழப்பீடாக, 25 லட்சம் ரூபாயை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். மேற்கொண்டு இழப்பீடு கோர, இந்த இடைக்கால இழப்பீடு தடையாக இருக்காது.

தமிழக அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையை, முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டதற்கு காரணமானவர்கள், கடமை தவறிய அதிகாரிகளிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். படிப்பை தொடரவும், பூர்த்தி செய்யவும், மாணவியை அண்ணா பல்கலை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். அவரிடம் இருந்து கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், தேர்வுக் கட்டணம், உணவுக் கட்டணம் உள்ளிட்ட எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. படிப்பை வெற்றிகரமாக தொடர, மாணவிக்கு அண்ணா பல்கலை நிர்வாகம் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையை பாதுகாக்கும் விதமாக, சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படுவதை, அரசும் போலீசாரும் உறுதி செய்ய வேண்டும். மாணவியின் பெயர், அவரை பற்றிய விபரங்கள் இடம் பெற்றிருப்பதை, சமூக வலைதளங்கள், மின்னணு ஊடகங்களில் இருந்து உடனடியாக அகற்ற, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

முதல் தகவல் அறிக்கை கசிந்தது குறித்து, துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us