ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
UPDATED : அக் 04, 2024 02:49 AM
ADDED : அக் 04, 2024 02:47 AM

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ரவுடி நாகேந்திரன் உட்பட 30 பேர் மீது, 5,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தனிப்படை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்டராங், கொலை செய்யப்பட்டது குறித்து சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில், கோயம்பேடு உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலைக்கான காரணமே தெரியாத நிலையில், முக்கிய குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்க முடியாமல் திணறி வந்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்தபோது, வேலுார் மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ரவுடி நாகேந்திரன் பேசியது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் விசாரித்தபோது, சிறையில் இருந்தபடி சதி திட்டம் தீட்டி, போலீசாருக்கு, 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணி காட்டி வரும் ரவுடி சம்பவம் செந்தில் வாயிலாக கூட்டாளிகளை ஏவி, ஆம்ஸ்ட்ராங்கை நாகேந்திரன் கொலை செய்தது தெரியவந்தது.
கொலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் முக்கிய பங்கு வகித்ததும் தெரியவந்தது. இதனால், அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.
அதன்பின், நாகேந்திரனையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதற்கு முன்னதாக, ரவுடிகள் பொன்னை பாலு, அஞ்சலி உட்பட, 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், ரவுடி திருவேங்கடம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சம்பவம் செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடத்தை கூட, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த அளவுக்கு, 'நெட்வொர்க்' அமைத்து தப்பித்து வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணன் உட்பட 30 பேர் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், 5,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தனிப்படை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஏ - 1 குற்றவாளியாக நாகேந்திரன், ஏ - 2 சம்பவம் செந்தில், ஏ - 3 அஸ்வத்தாமன் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மூவரும் தான் கொலைக்கான சூத்திரதாரிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, ரவுடிகள், வழக்கறிஞர்கள், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தபோது, அவர்கள் அளித்த வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியை தடுக்கவே கொலை
ஒரே
சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், வடசென்னையில் தன்னை விட அசுர பலத்துடன்
ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியடைந்து வருவது, ரவுடி நாகேந்திரனுக்கு பிடிக்கவில்லை.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், ஓராண்டுக்குள்
ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துகட்ட வேண்டும் என, சுரேஷ் மனைவி சபதம் எடுத்து
இருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய நாகேந்திரன், கொலைக்கு திட்டம்
போட்டு கொடுத்தார்.
அவர் ஒருங்கிணைத்த கூட்டாளிகள், ஆறு மாதம்
நோட்டமிட்டு, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன
விவகாரத்தில், ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இல்லை என, விசாரணையில்
தெரியவந்திருப்பதாக, குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.