கரு கலைக்கப்பட்ட மாணவி பலி; காதலன் உட்பட மூவர் மீது வழக்கு
கரு கலைக்கப்பட்ட மாணவி பலி; காதலன் உட்பட மூவர் மீது வழக்கு
ADDED : மார் 02, 2024 08:31 AM

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த 17 வயது பெண், காந்தி கிராமத்தில் உள்ள கல்லுாரி விடுதியில் தங்கி, நோயாளிகள் பராமரிப்பு குறித்த சான்றிதழ் படிப்பு படித்து வந்தார். மாணவியின் பெற்றோர் இறந்து விட்டதால், அவர் திண்டுக்கலில் பாட்டி பராமரிப்பில் இருந்தார். சில நாட்களுக்கு முன், மாணவியை பார்க்க, திருச்சியில் வசிக்கும் அவரது அத்தை மீனாட்சி சென்றார்.
மாணவியின் உடலில் இருந்த மாற்றத்தைக் கண்ட அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. காந்திகிராமம் அருகே உள்ள சின்னாளப்பட்டியில், காப்பகத்தில் பணியாற்றும் ராம்குமார், 25, என்பவரை காதலிப்பதாகவும், அவரால் கர்ப்பமானதாகவும் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த அத்தை, கர்ப்பத்தை கலைக்க மாணவியை திருச்சி அழைத்து வந்தார். உறையூரில் உள்ள சுதர்சனா மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்தது. மாணவிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு தனியார் டாக்டர் அனுப்பினார். அங்கு, சிகிச்சை பலனின்றி, இரு நாட்களுக்கு முன் மாணவி இறந்து விட்டார்.
இதையடுத்து, மாணவியின் காதலன் ராம்குமார், அத்தை மீனாட்சி, கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகிய மூவர் மீதும், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அக்காவுடன் வாழ மறுத்த மாமாவை கொலை செய்த மைத்துனர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் முத்துமாரி 32. இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மதுரைவீரன் மகள் விஜித்ராவுக்கும் 27, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். முத்துமாரி அடிக்கடி வெளியூர் வேலைக்கு செல்வதால் கணவன், மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டது. விஜித்ராவை முத்துமாரி சந்தேகித்தார்.
விஜித்ரா இரு வாரங்களுக்கு முன் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சில நாட்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முத்துமாரி, விஜித்ராவுடன் வாழ முடியாது என்றார்.
விஜித்ரா தம்பி விஜய் 26, ''அக்காவை விவகாரத்து செய்து விட்டு நீ உயிருடன் இருந்து விடுவாயா,'' என மிரட்டினார். முத்துமாரி விஜித்ராவிடம் சண்டையிட்டு தாலியை பெற்று சென்றார். நேற்று முன்தினம் இரவு சாவடி அருகே நின்ற முத்துமாரியை டூவீலரில் சென்ற விஜய், சிந்துவம்பட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் கவுதமுடன் 23, சேர்ந்து அழைத்து சென்றார்.
நேற்று காலை கல்குவாரி அருகே 18ம் கால்வாய் கட்டப்பாலத்திற்கு கீழ் முத்துமாரி ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார். முத்துமாரி தாயார் மலையாயி போலீசில் அளித்த புகாரில், ''மகனை கத்தியால் குத்தி கொலை செய்த விஜய், கவுதம் ஆகியோரை கைது செய்ய வேண்டும்,'' என்றார். விஜய், கவுதமை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை டிரைவரை கொலை செய்து கார் கடத்தல்
மதுரையில் இருந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வாடகைக்கு எடுத்து செல்லப்பட்ட காரின் டிரைவர் முருகனை கொலை செய்து காரை கடத்தியது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தம்பதி உள்ளிட்ட 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்
பெரம்பலுார் மாவட்டம், பாண்டகபாடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 60, இவரது அண்ணன் ராமையா, 65, இருவருக்கும் பூர்வீக நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நேற்று பகல் 2:00 மணியளவில், சகோதரர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த ராமையா அரிவாளால் கலியமூர்த்தியை வெட்டி கொலை செய்தார். காயமடைந்த ராமையா, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தகவலறிந்த வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தங்க முலாம் பூசிய நகையை வைத்து ரூ.8 லட்சம் மோசடி
ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் லோக்கல் பண்ட் ரோட்டைச் சேர்ந்த ராமையா மகன் திருவெம்பாலா பிரசாந்த் 35. என்பவர் பல்வேறு தவணைகளாக 181 கிராம் நகைகளை வைத்து ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் கடன் பெற்றார். பிப்., 16ல் வங்கியில் அதிகாரிகள் தணிக்கை செய்த போது திருெவம்பாலா பிரசாந்த் அடகு வைத்த 181 கிராம் நகைகளும் தங்க மூலாம் பூசப்பட்ட செம்பு நகைகள் என தெரிய வந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் பாண்டியராஜ் எஸ்.பி., சந்தீஸிடம் புகார் செய்தார். இதயைடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருெவம்பாலா பிரசாந்தை கைது செய்தனர்.
ரூ.20,000 லஞ்சம்: புரோக்கருடன் சார் - பதிவாளர் கைது
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 65. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலிமனையை, கார்த்திகேயன் என்பவருக்கு விற்க முடிவு செய்து, அதற்காக நேற்று திருவெறும்பூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய திட்டமிட்டனர்.
இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் கடந்த, 27ம் தேதி, திருவெறும்பூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் - பதிவாளர் சபரிநாதனை அணுகி, பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுஉள்ளார். அதற்கு சபரிநாதன், ஒரு பத்திரப்பதிவுக்கு, 10,000 ரூபாய் வீதம், இரு பத்திரப்பதிவுக்கு, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு பத்திரப்பதிவு முடிந்தவுடன், கோபாலகிருஷ்ணன் லஞ்சப்பணத்தை, அங்கிருந்த புரோக்கர் ஜெயசூர்யா, 24, என்பவர் மூலம் கொடுத்தார்.
சார் - பதிவாளர் சபரிநாதன், 41, அதை வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு மக்கள் மறியல்: கைது 1
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டையில் சாலையில் ஒரு சமூக தலைவர் உருவப்படம் இருந்தது. நேற்று முன் தினம் இரவில் மர்ம நபர்கள் அந்த படத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்தனர். நேற்று காலை அதனை கவனித்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ராம்நாத் 25, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாட்ச் திருடிய மாணவர் மீது எச்சில் துப்பிய மதரசா ஆசிரியர்
மஹாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் என்றழைக்கப்படும் அவுரங்காபாதில், ஜாமியா உலும் மதரசா எனப்படும் இஸ்லாமிய மத போதனை பள்ளி உள்ளது. இங்கு குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவர் உட்பட பலர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் சூரத் மாணவர், மதரசா அருகேயுள்ள கடையில் இருந்து, 100 ரூபாய் மதிப்புள்ள வாட்சை திருடியுள்ளார்.
இது தொடர்பான காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. திருட்டு குறித்து கடைக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியதில் சூரத் மாணவரிடம் இருந்து வாட்ச் மீட்கப்பட்டது.
இந்நிலையில் மதரசாவின் ஆசிரியர் மவுலானா சயீத் ஒமர் அலி, அந்த மாணவனை அரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து எச்சில் துப்பினார். மேலும் அவனுடன் படிக்கும் சிறுவர்களையும், அவன் மீது எச்சில் துப்பவைத்து சரமாரியாக அடிக்கும்படி கூறினார்.
இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதைப் பார்த்த சிறுவனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மதரசா ஆசிரியர் மீது சிறார் பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தீ விபத்தில் 45 பேர் பலி
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள பெய்லி ரோட்டில் கிரின் கோஷி காட்டேஜ் என்ற ஏழு மாடி வர்த்தக நிறுவனம் உள்ளது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு, முதல் மாடியில் உள்ள உணவகத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென, மற்ற மாடிகளுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள் ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில், 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

