தந்தை நிழலில் வளர்ந்த போன்சாய் செடிதான் ஸ்டாலின் சிறையில் இருந்து வெளி வந்த சவுக்கு சங்கர் பேட்டி
தந்தை நிழலில் வளர்ந்த போன்சாய் செடிதான் ஸ்டாலின் சிறையில் இருந்து வெளி வந்த சவுக்கு சங்கர் பேட்டி
ADDED : செப் 25, 2024 09:09 PM

மதுரை:குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து யூடியூபர் சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார்.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதுாறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வேறு சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதேநேரத்தில் அவர் கஞ்சா வைத்து இருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்திலும் கைது செய்தனர். மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதை எதிர்த்து அவரது தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற விசாரணையில் தமிழக அரசு, 'சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை மறுபரிசீலனை செய்த அறிவுரைக் கழகம், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று கொள்கிறோம்' என விளக்கம் அளித்தது. குண்டர் சட்டத்தை ரத்து செய்ததற்கான அரசாணையும் வெளியிட்டது.
இதையடுத்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், 'அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமினில் விடுவிக்கலாம்' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதைதொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார்.
'போன்சாய்' முதல்வர்
சிறையில் இருந்து வெளி வந்த சவுக்கு சங்கர் அளித்த பேட்டி:
தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு முறை குண்டர் சட்டத்தில் தி.மு.க., அரசு என்னை அடைத்தது வெட்கக்கேடு. நான் நடத்திய சவுக்கு மீடியா தி.மு.க., அரசின் உண்மை முகத்தை 8 மாதத்திற்குள் வெளிச்சம் போட்டு காட்டியது. இதன் காரணமாக, என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போட்டனர். அது மட்டுமல்ல; பொய்யாக வழக்கு மேல் வழக்குகளாகப் போட்டனர். போலீசாரை அவதுாறாக பேசியது உட்பட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் நான் போலீஸ் வாகனத்தில் அலைக்கழிக்கப்பட்டேன். கோவை சிறையில் என் கை உடைக்கப்பட்டு, 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஒவ்வொரு முறையும் போலீசார் என்னை கஸ்டடியில் எடுக்கும்போது, 'வெளியே வந்த பின், தி.மு.க., அரசு குறித்து எதுவும் பேசக்கூடாது. தி.மு.க., அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும்' என நிபந்தனை விதித்தனர். 'இதை ஏற்றுக்கொண்டால் உங்களை உடனடியாக விடுவிப்போம். மீறினால் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வரவிடமாட்டோம்' என நெருக்கடி கொடுத்தனர்.
'நான் உண்மையை பேச எப்போதுமே அஞ்சுவதில்லை' என கூறியதால்தான், சென்னை புழல் சிறையில் இருந்து என்னை அவசரம் அவசரமாக அழைத்துவந்து மதுரை சிறையில் அடைத்தனர்; குண்டர் சட்டத்திலும் கைது செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்த 'போன்சாய்' செடி. பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால், கருணை அடிப்படையில் வேலை வழங்குவது போல், ஸ்டாலின் தி.மு.க.,வின் தலைவராகவும், முதல்வராகவும் ஆகி இருக்கிறார். உண்மையை கூறியதால், சவுக்கு மீடியா வங்கி கணக்கு முடக்கப்பட்டது; அலுவலகத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது; வீடு தீ வைக்கப்பட்டது. என் தந்தை, தாயாரின் பென்ஷன் கணக்குகள் 7 முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடக்கும் எந்த உண்மையும் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மிக கவனமாக இருக்கின்றனர்.
5 மாதங்களுக்கு பின் ஜாமினில் வெளியே வந்துள்ளேன். கூடுதல் வீரியத்துடன் செயல்படுவேன். தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.