வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை
ADDED : ஜன 11, 2024 07:34 AM

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடற்கரை கிராமம் வேம்பாரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அஸ்வின் குமார் 7. அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்தான். கடந்த இரண்டு தினங்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்துள்ளான்.
நேற்று காலையில் வீட்டில், கழுத்தில் கத்திக் குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். சம்பவம் நடந்த முத்துக்குமாரின் வீடு, கடலோர போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்புறம் உள்ளது. போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
இங்கு பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலுக்கு செல்பவர்கள். காலையில் அனைவரும் தொழிலுக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியே இருந்த சிறுவன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
---
லஞ்சம்: பஞ்., தலைவர் கைது
தென்காசி அருகே குத்துக்கல்வலசை ராஜாநகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது உறவினரான கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஐஸ்வர்யா குடியிருப்பை சேர்ந்த ரெஜினீஸ் பாபு 44, வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெற விண்ணப்பித்திருந்தார். குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவர் சத்யராஜ் 39, வீடு கட்ட, திட்ட மதிப்பீட்டில் இரண்டு சதவீதம் அதாவது ரூ. 46 ஆயிரம் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார். ரெஜினீஸ்பாபு இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,பால் சுதரிடம் புகார் செய்தார்.
போலீசார் ரசாயன பவுடர் தடவி கொடுத்த ரூ. 46 ஆயிரத்தை நேற்று ஊராட்சி அலுவலகத்தில் வைத்து ரெஜினீஸ்பாபு கொடுத்தார். அதனை சத்யராஜின் நண்பரும் கட்டட கான்ட்ராக்டருமான சவுந்தரராஜன் 40, பெற்று சத்யராஜிடம் கொடுத்துள்ளார். அதில் அவர் ரூ. 40 ஆயிரம் மட்டும் பெற்றுள்ளார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, எஸ்.ஐ., ரவி மற்றும் போலீசார் ஊராட்சித் தலைவர் மற்றும் கட்டட கான்ட்ராக்டரை கைது செய்தனர். இருவரது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்யராஜ் முன்னர் அ.தி.மு.க.,வில் இருந்தார். தற்போது தி.மு.க., பிரமுகராக உள்ளார்.
---
நகைக்கடை திறப்பதாக கூறி 170 சவரன் தங்கம் மோசடி
கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 49. தங்கக்கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்துகிறார். இவருக்கு, சில நாட்களுக்கு முன், சாமியார் புது வீதியைச் சேர்ந்த விஸ்வநாதன், 47, என்பவர் அறிமுகமானார். அவர், சரவணனிடம், தான் புதிதாக திறக்கவுள்ள நகைக்கடைக்கு நகைகள் கேட்டார்.
இதையடுத்து சரவணன் கடந்த மாதம் இரண்டு தவணைகளாக, 170 சவரன் தங்கக்கட்டிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், உறுதியளித்தது போல், விஸ்வநாதன் நகைக்கடையை துவக்கவில்லை. தங்கக்கட்டிகளை சரவணன் திருப்பிக்கேட்டும், தராமல் விஸ்வநாதன் ஏமாற்றி வந்தார். இதையடுத்து, செல்வபுரம் போலீசில் விஸ்வநாதன் மீது சரவணன் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
---
டூவீலரில் துப்பட்டா சிக்கி பெண் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே வெம்பக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பரமானந்தம், 48. இவரது மனைவி புவனேஸ்வரி, 38. இருவரும் துலுக்கன்குறிச்சியில் உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றனர். வெம்பக்கோட்டை ஆலங்குளம் ரோட்டில் சென்றபோது புவனேஸ்வரியின் துப்பட்டா காற்றில் பறப்பதை தடுக்க கழுத்தை சுற்றி தொங்கவிட்டுள்ளார்.
அப்போது துப்பட்டா டூவீலரின் பின் சக்கரத்தில் திடீரென சிக்கிக் கொண்டது. இதனால் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். துப்பட்டா கழுத்தை இறுக்கியதால் புவனேஸ்வரி மயக்கமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
---
4 வயது மகனை கொலை செய்தது ஏன்? கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில், 'மைண்ட்புல் ஏ.ஐ., லேப்' என்ற நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் சுசனா சேத், 39. இவரது மகன் சின்மய் ரமணன், 4. கடந்த 6ம் தேதி மகனுடன் கோவாவுக்கு, சுசனா சுற்றுலா சென்றார். அங்கு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்.
இந்நிலையில், 7ம் தேதி மகனை அவர் கொலை செய்தார். உடலை சூட்கேசில் அடைத்து, 8ம் தேதி வாடகை காரில் பெங்களூரு கிளம்பினார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ரத்தக்கறை இருந்ததால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார், சுசனா பயணித்த கார் டிரைவரிடம் மொபைல் போனில் பேசினர். அவர்கள் அறிவுரைப்படி, சுச்சனாவை கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா, ஐமங்களா போலீசாரிடம், கார் டிரைவர் ஒப்படைத்தார். கார் டிக்கியில் இருந்த சூட்கேசில் சின்மய் உடல் இருந்தது. சுசனா கைது செய்யப்பட்டு, கோவா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சின்மய் உடல், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பணிபுரியும் சுசனாவின் கணவர் வெங்கட்ரமணாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் இரவு சித்ரதுர்கா வந்தார். பிரேத பரிசோதனை முடிந்ததும், சின்மய் உடல், அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சித்ரதுர்காவில் இருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக, பெங்களூருக்கு சின்மய் உடல் நேற்று வந்தது. நேற்று மதியம் உடல் எரியூட்டப்பட்டது. அப்போது, அவனது தந்தை கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையில் கோவா போலீசாரிடம் சுசனா அளித்துள்ள வாக்குமூலம்: எனக்கும், கணவர் வெங்கட்ரமணாவுக்கும், கருத்து வேறுபாடு உள்ளது. விவாகரத்து வழக்கு, விசாரணையில் உள்ளது. சின்மயை நேரில் சந்தித்து பேசவும், வாரந்தோறும் ஞாயிறு அன்று, வீடியோ காலில் பேசவும், வெங்கட்ரமணாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
என் மகனிடம், வெங்கட்ரமணா பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. மகனை என்னிடம் இருந்து பிரித்து விடுவாரோ என்ற பயம் இருந்தது. நாங்கள் கோவாவில் இருந்த போது, 7ம் தேதி வெங்கட்ரமணா வீடியோ காலில் அழைத்தார். சின்மயிடம் போனை கொடுக்கும்படி கூறினார். சின்மய் துாங்குவதாக பொய் கூறினேன். ஆனால், அருகில் படுத்திருந்த சின்மய், தந்தையிடம் பேச போனை தரும்படி கேட்டான். இதனால், கோபத்தில் அவனது முகத்தை, தலையணையால் அழுத்தினேன்; மூச்சுத்திணறி இறந்து விட்டான்.
வேண்டும் என்றே கொலை செய்யவில்லை. எதிர்பாராத விதமாக நடந்து விட்டது. அவன் இறந்த பின் என்ன செய்வது என்று தெரியவில்லை. கையில் கத்தியால் அறுத்து, தற்கொலைக்கு முயன்றேன். துணிச்சல் வரவில்லை. பின் சின்மய் உடலை, பெங்களூரு கொண்டு செல்ல நினைத்தேன். கையை அறுத்த இடத்தில், துணியை வைத்து சுற்றினேன். சின்மய் உடலுடன் பெங்களூரு வந்ததும் தற்கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் போலீசாரிடம் சிக்கி விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.
---
'டிவி' நேரலையில் துப்பாக்கி காட்டி போதை கடத்தல் கும்பல் அட்டூழியம்
குவாயாகில் நகரில் உள்ள, 'டிசி டெலிவிஷன்' என்ற செய்தி தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு நேற்று முன்தினம் நடந்து வந்தது. அப்போது, முகமூடி அணிந்த போதை கடத்தல் கும்பல் ஒன்று, அரங்கத்திற்குள் நுழைந்து செய்தியாளர்களையும், நிலைய ஊழியர்களையும் துப்பாக்கி காட்டி மிரட்டி கேமரா முன் தரையில் அமர செய்தது.
'நீங்கள் நேரலையில் உள்ளீர்கள். மாபியாக்களுடன் விளையாட கூடாது என்பது உங்களுக்கு தெரியும்' என, அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. 15 நிமிடங்களுக்கு பின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்த போலீசார், கடத்தல் கும்பலை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.