குழாய் புதைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
குழாய் புதைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
ADDED : நவ 05, 2024 06:03 AM

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதி குடிநீர் தேவைகளுக்காக, திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையை ஒட்டி, சிறுதாவூர் பகுதியில், ஐந்து குடிநீர் கிணறுகள் உள்ளன. இந்த கிணற்றிலிருந்து குழாய் இணைப்புகள் வாயிலாக, பேரூராட்சி வார்டுகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சாலை விரிவாக்கம் செய்யும் பணியுடன், புதிய குழாய் இணைப்பு அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
ஆமூர்- - சிறுதாவூர் இடையே உள்ள தென்னந்தோப்பு பகுதியில், புதிய குழாய் பதிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. வேலை முடிந்த பின்பும், அந்த பள்ளத்தை மூடாமலேயே விட்டுவிட்டனர். தடுப்பும் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆமூர் பகுதியை சேர்ந்த தேவராஜ், 30, மனைவி மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் திருப்போரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளத்தில், மண் சறுக்கி நான்கு பேரும் பைக்குடன் விழுந்தனர்.
இதில், தேவராஜ் சுயநினைவு இழந்தார். 2 வயது குழந்தை மோகித், படுகாயம் அடைந்தான். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், குழந்தை மோகித் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று 5:30 மணிக்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை மோகித் உயிரிழந்தான்.

