கூட்டுறவு வங்கி நகைக்கடன் கிராமுக்கு ரூ.4,500 பெறலாம்
கூட்டுறவு வங்கி நகைக்கடன் கிராமுக்கு ரூ.4,500 பெறலாம்
ADDED : மார் 17, 2024 06:50 AM
சென்னை : கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகை அடமானத்தில், நகைக்கடன் வழங்கப்படுகிறது.
தற்போது, மாநில தலைமை கூட்டுறவு வங்கியில், கிராம் தங்கத்திற்கு, 4,200 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகளிலும், சங்கங்களிலும், 3,800 - 4,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கிராம் தங்கம் விலை, 6,150 ரூபாயாக உள்ளது. எனவே, கிராம் தங்கம் மீது வழங்கப்படும் கடன் தொகையை, 4,200லிருந்து, 4,500 ரூபாயாக உயர்த்தி, கூட்டுறவு துறை உத்தரவிட்டுஉள்ளது.
அதற்கு ஏற்ப, மாநில தலைமை கூட்டுறவு வங்கி உட்பட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும், நகைக்கடன் மீது வழங்கப்படும் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

