ADDED : அக் 03, 2025 03:17 AM

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தருமத்துப்பட்டி கிணற்றில் இறந்து கிடந்த 6 வயது பெண் மான் உடலை, வனத்துறையினர் மீட்டனர். அடுத்தடுத்து இப்பகுதியில் மான் உடல்கள் கிணற்றில் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
கன்னிவாடி வனப்பகுதியில் கடமான், முயல், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனஉயிரின வேட்டை வாடிக்கையாகவுள்ளது. வனத்துறையினர் பெயரளவில் கண்காணிப்பு, நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கைது, வன உயிரின உடல் பாகங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் புகார் நீடிக்கிறது.
சில வாரங்களுக்கு முன் 14 சிப்பிப்பாறை நாய்களுடன் குட்டத்துப்பட்டி பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய கரூர் மாவட்டத்தை சேர்ந்த 14 பேரை, லாரியுடன் வனத்துறையினர் கைது செய்தனர்.
இச்சூழலில் இரு நாட்களுக்கு முன் சத்திரப்பட்டி தோட்ட மலையாண்டி கோயில் அருகே உள்ள கிணற்றில் இருந்து இறந்த நிலையில் ஒரு கடமானை மீட்டனர்.
நேற்று தருமத்துப்பட்டி தீட்டுப்புளி அருகே தனியார் தோட்டத்து கிணற்றில் மற்றொரு மான் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத்துறையினர் 6 வயதுள்ள பெண் கடமானை இறந்த நிலையில் மீட்டனர். பரிசோதனைக்குப்பின் வனத்துறை வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
அடுத்தடுத்து இறந்த மான்கள் மீட்கப்படுவது தொடரும் நிலையில் குடிநீருக்காக வந்தபோது தவறி விழுந்ததா, வேட்டை நபர்கள் விரட்டியதால் விழுந்நதவையா என வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.